ETV Bharat / state

"கள்ளச்சாராயம் விற்றால் குண்டாஸ்; சிறந்த அதிகாரிகளை நியமனம் செய்யுங்க" - முதலமைச்சர் உத்தரவு!

author img

By

Published : May 17, 2023, 3:51 PM IST

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister Stalin
கள்ளச்சாராயம்

சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(மே.17) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாநில அளவில் மதுவிலக்குத் தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகியோரின் வாட்ஸ்அப் எண்களை அறிவித்து, அதன் மூலம் பெறப்படும் புகார்களை மதுவிலக்கு அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குநர் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று உள்துறைச் செயலாளர் மூலம் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு நடத்த வேண்டுமென்றும், இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும், இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில், எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல்துறை மற்றும் கலால்துறை உதவி ஆணையர் கண்காணிக்க வேண்டுமென்றும், அதோடு, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதனை உள்துறைச் செயலாளர் கண்காணிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர், மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் மா.மதிவாணன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஷ சாராய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது... அடுத்தடுத்து வெளிவரும் திருப்பங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.