ETV Bharat / state

'தென்னாட்டு ஜான்சி ராணி' அஞ்சலை அம்மாளின் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 6:12 PM IST

Anjalai Ammal statue: கடலூர் காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று (நவ.02) திறந்து வைத்தார்.

chief minister mk stalin unveiled the freedom fighter anjalai ammal statue located in cuddalore
தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலை அம்மாள் சிலை திறப்பு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலையை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக இன்று (நவ.02) திறந்து வைத்தார்.

  • ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என அண்ணல் காந்தியடிகளால் வியந்து பாராட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சென்னை மாகாண சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கடலூர் அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலையைத் திறந்து வைத்தேன்.

    தமிழ்நாட்டுப்… pic.twitter.com/XmKuqrpdYC

    — M.K.Stalin (@mkstalin) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி மற்றும் விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை தெரியப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தனது சிறுவயது முதல் சுதந்திர பற்று மிக்கவராகத் திகழ்ந்த அஞ்சலை அம்மாள், 1921-ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.

சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேயப் படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காகச் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

மேலும், அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காகத் தியாகம் செய்தவர். குறிப்பாக மகாத்மா காந்தியால் "தென்னாட்டின் ஜான்சி ராணி" என்று அழைக்கப்பட்டார். மேலும் அஞ்சலை அம்மாள் மூன்று முறை மக்கள் பணிக்காகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளை நினைவைப் போற்றுகின்ற வகையில், 2021 - 2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கடலூர் மாநகராட்சியில் உள்ள காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலையை இன்று தமிழக முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் ஆகியோரும், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகம் மட்டுமல்ல.. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது..! முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.