ETV Bharat / state

கிண்டியில் அதிநவீன கரோனா மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர்...!

author img

By

Published : Jul 8, 2020, 12:18 AM IST

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதியுடன் கூடிய அதிநவீன கரோனா மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூலை 7) திறந்து வைத்தார்.

chief-minister-inaugurating
chief-minister-inaugurating

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.136 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தை அதிநவீன மருத்துவ உபகரண வசதிகள் கொண்ட கரோனா மருத்துவமனையாக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் அந்த மருத்துவமனையில் நான்கு தளங்கள், வென்டிலேட்டர்களின் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்காக 60 படுக்கைகள் என மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் 40 எண்ணிக்கையிலான அதிநவீன மருத்துவ அறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி அடித்தளத்தில்(semi basement) வரவேற்பு அறை, அதிநவீன சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் ரத்த சேமிப்பு அறை உள்ளது. தரைத்தளத்தில் சிடி ஸ்கேன்(CT Scan), அல்ட்ரா சோனோகிராம் எகோ(Ultra Sonogram ECHO), எக்ஸ்ரே (X-ray), வென்டிலேட்டர்கள்(Ventilators), ஹை ப்லோவ் நாசல்(High Flow Nasal), கேனுலா(Cannula) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் அனைத்து மருத்துவ உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மூன்றாம் தளத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சிக் கூடம், காணொலிக் காட்சி மூலம் கரோனா நோயாளிகள் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்கும் வசதி, உறவினர்களை தொடர்பு கொள்ள அதிநவீன ஃவைபை(WIFI)வசதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் பாதுகாப்பிற்காக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் அமைந்துள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களும் இம்மருத்துவமனையில் உள்ளது.

அதையடுத்து இந்த மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள், 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ வல்லுநர்கள் மாற்றுப்பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கரோனா சமூகப் பரவலாக மாறவில்லை' - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.