ETV Bharat / state

சில்லென்று மாறிய சென்னை... காலை முதல் பெய்த மழை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 12:40 PM IST

Chennai rain: காலை முதல் தொடங்கிய தொடர் மழையால் சென்னை மாநகர் ஒரு மினி ஊட்டியாக காட்சியளிப்பது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அலுவலகங்களுக்கு செல்லும் மக்களை ஓலா மற்றும் ஊபர் அதிக கட்டண வசூலால் சோதித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் காலையிலேயே கலை கட்டிய மழை…
சென்னையில் காலையிலேயே கலை கட்டிய மழை…

சென்னை: தமிழக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது அண்மைக் காலமாக காலை நேரத்தில் வெயிலும் மாலை நேரத்தில் மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

சென்னை நகரம் அதன் புறநகரிலும் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் தொடர் சாரல் மழை பெய்தது.

அதேபோல் அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கனமழையானது பெய்தது. சில நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையின் தாழ்வான பகுதியில் மழை நீரானது தேங்கியது. அதேபோல் புறநகர் பகுதிகளில் சாலையில் வெள்ளம் போல் மழை நீரானது ஓடியது.

போக்குவரத்து நெரிசல்: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து தொடர் மழை பெய்ததால் ஜிஎஸ்டி சாலை உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை நேரத்தில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க: அரசு பள்ளியில் அவலம்... சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து...! நூலிழையில் உயிர் தப்பிய சமையலர்!

சில்லென்ற சென்னை: கடந்த மூன்று நாட்களாக காலையில் வெயில் சுற்றறித்துவந்த நிலையில் தற்போது காலை முதலே வானம் மேகமூட்டத்துடம் இதமான சூழல் நிலவுவதாலும் மேலும் சாரல் மழை மற்றும் கனமழை பெய்ததாலும் சென்னையே ஒரு மினி ஊட்டியாக மாறி உள்ளது.

ஓலா ஊபர் வரவில்லை: சென்னையில் அலுவலகங்கள் மற்றும் வெளியில் செல்பவர்கள் ஓலா அல்லது ஊபர் மூலம் வாகனங்களை புக் செய்வது வழக்கம். ஆனால் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் ஓலா செயலியில் முன்பதிவு செய்தாலும் வாகனங்கள் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின் துண்டிப்பு: சென்னையில் ஒரு சில இடத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மகாலிங்கபுரம், அயப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி ஆகிய குறிப்பிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் துண்டிப்பு செய்யப்பட்டது.

சென்னை வானிலை மையம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் மற்றும் மிதமான முதல் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இதேபோல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் சென்னை மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று இளைப்பாறியுள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சனம்.. காவேரியில் திரண்ட மக்கள் வெள்ளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.