ETV Bharat / state

செங்குன்றம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.3000 கோடி!

author img

By

Published : Jul 5, 2023, 4:12 PM IST

Updated : Jul 5, 2023, 4:27 PM IST

தமிழ்நாட்டில் இரண்டு சார்பதிவாளர்(sub registrar office) அலுவலகங்களில் வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3000 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று சென்னை செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டுச் சென்றனர்.

குறிப்பாக பொதுமக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமானவரித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த இரண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கையையும், அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் 30 லட்சம் ரூபாய்க்கும் மேல் பரிவர்த்தனை மேற்கொண்ட நிலம் பத்திரப்பதிவு செய்த தனி நபர் வருமான வரி கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு மேற்கொண்டதில் கோடிக்கணக்கான ரூபாய் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை முடிவில் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நில பத்திரப்பதிவு தொடர்பாக நிதி பரிவர்த்தனை அறிக்கைகளில் கணக்கு காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது 2000 கோடி ரூபாய்க்கு மேல் பத்திரப்பதிவு தொடர்பான கணக்கை காட்டவில்லை என்பதையும் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் பத்திரப்பதிவுகள் நடைபெற்றது தொடர்பாகவும், நில மதிப்பை குறைத்துக் காட்டி பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாகவும் ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மதிப்பீடு செய்து பார்க்கும் பொழுது கணக்கில் காட்டப்படாத தொகையின் மதிப்பு அதிகரிக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட சார் பதிவாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக கணக்கு காட்டாத விவகாரம் தொடர்பாக அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சார்பதிவாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கணக்கு காட்டாமல் இருந்திருப்பது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில், 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் நிதிப் பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் அடுத்தடுத்து முறையாக கணக்கு காட்டாத சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு செயல்படும் நேரம் அறிவிப்பு!

Last Updated : Jul 5, 2023, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.