ETV Bharat / state

நியூஸ்கிளிக் விவகாரம்; வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 9:39 AM IST

Raids on journalists houses in Delhi: டெல்லியில் பல்வேறு செய்தியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் காவல்துறை சோதனை நடத்தியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

raids on journalists houses in Delhi
நியூஸ்கிளிக் விவகாரம் - வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் மத்தியரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படுவதற்கு நியூஸ்கிளிக் (NewsClick) சீனாவிடம் நிதி உதவி பெறுவதாக நியூயார்க் டைம்ஸ் (New York Times) தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று (அக்.3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்தில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர், இதில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என சோதனை நடத்தினர்.

மேலும், நியூஸ்கிளிக் (NewsClick) தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை செய்ததோடு மட்டும் அல்லாமல், நியூஸ்கிளிக் (NewsClick) நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியது.

இது குறித்து டெல்லி காவல் துறையினர் தரப்பில், டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் என்ற தனியார் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் தொடர்புடைய செய்தியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் நேற்று (அக் 03) காலை முதல் டெல்லி காவல் துறையினரின் சிறப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், மேலும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதில் ஒரு சில எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சீனாவிடம் இந்நிறுவனம் நிதி பெற்று இந்திய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதாக வந்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம், தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில் இது போன்று செய்தியாளர்களைக் குறிவைத்து சோதனைக்கு உட்படுத்துவது மற்றும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரெய்டு நடத்துவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளது.

மேலும், பத்திரிகை நிறுவனம் மற்றும் பத்திரிகையாளர் வீடுகளில் நடைபெற்று வரக்கூடிய சோதனைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூர்ந்து கவனித்து வருவதாகவும், இது போன்ற செயல்பாடுகள் அதிர்ச்சியை அளிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாது, டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் என்ற தனியார் செய்தி நிறுவனம் மற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகளில் நடைபெற்று வரக்கூடிய சோதனைகள் தொடர்பாகவும் மற்றும் விசாரணைகள் தொடர்பாகவும் மத்திய அரசும், டெல்லி காவல் துறையும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Asian Games 2023: ட்ரிப்பிள் ஜம்பில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.