ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் வழக்கு: பேராசிரியர் ஹரிபத்மன் புழல் சிறையில் அடைப்பு!

author img

By

Published : Apr 4, 2023, 8:15 AM IST

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கு; கல்லூரி பேராசிரியர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலை படிப்பின் போது பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டதாகவும், தொந்தரவு காரணமாக தான் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கலை நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்த பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் மாணவியுடன் படித்த மூன்று சக தோழியிடம் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தி விவரங்களை பெற்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்ற ஹரிபத்மன் நேற்று முன்தினம் சென்னை திரும்பியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவரது செல்போன் எண் கடைசியாக மாதவரத்தில் உள்ள அவரது தோழியுடன் பேசியிருப்பது தெரிய வந்ததையடுத்து, நேற்று அதிகாலை மாதவரத்தில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அவரின் தோழி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் உள்ளே நுழைந்து முதல் தளத்தில் பதுங்கி இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரிபத்மனை போலீசார் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் கூறிய மாணவிகள் அனைவருடனும் சகஜமாக மட்டுமே பேசி வந்ததாகவும், தன் மீது புகார் கூறிய முன்னாள் மாணவி வேறு காரணத்திற்காக கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும், தன் மீது கூறும் குற்றச்சாட்டு உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியன் வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து பேராசிரியர் ஹரிபத்மனை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பேராசிரியர் ஹரிபத்மன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் இதே போல மற்ற மாணவிகளிடம் பேராசிரியர் ஹரிபத்மன் தவறாக நடந்து கொண்டாரா? தனது செல்போனில் வேறு ஏதும் விவரங்கள் எடுத்து வைத்துள்ளாரா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஏதேனும் செல்போனில் இது குறித்த விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து பேராசிரியர் ஹரிபத்மனை விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் இல்லை - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.