ETV Bharat / state

விளையாட்டு அறிவியல் படிப்பில் தனிச்சிறப்புடைய இலவச ஆன்லைன் பாடப்பிரிவுகள்; சென்னை ஐஐடி-என்பிடெல் அறிமுகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 4:00 PM IST

Free online courses in Sports Science: விளையாட்டு அறிவியல் பாடத்தில் 7 புதிய இலவச ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி-என்பிடெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர்வதற்கான கடைசி தேதி 2024, பிப்ரவரி 19 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி-என்பிடெல் அறிமுகம்
விளையாட்டு அறிவியல் படிப்பில் தனிச்சிறப்புடைய இலவச ஆன்லைன் பாடப்பிரிவுகள்

சென்னை: சென்னை ஐஐடி - என்பிடெல் இணைந்து விளையாட்டு அறிவியல் பாடத்தில், 7 புதிய ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பாடப்பிரிவுகளை ஆன்லைனில் கட்டணம் ஏதுமின்றி படிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோட்பாடு (Theory) மற்றும் நடைமுறை (practical) பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை, இந்த விரிவான ஆன்லைன் படிப்புகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்திய மற்றும் தெற்காசிய உடல் அமைப்பு மற்றும் கலாச்சார அம்சங்களுக்கு ஏற்ப இப்பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த 7 பாடப்பிரிவுகளுக்கான முதல் பிரிவு வகுப்புகள் 2024, பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தொடங்க உள்ள நிலையில், விண்ணப்பிக்கவும் அன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய என்பிடெல் இணைய முகவரி https://nptel.ac.in/courses என்பதாகும்.

தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) கடந்த 2003ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னை, மும்பை, டெல்லி, கான்பூர், காரக்பூர், கவுகாத்தி, ரூர்க்கி ஆகிய 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் தொடங்கப்பட்டது.

இந்த புதிய ஆன்லைன் படிப்புகள் குறித்து சென்னை ஐஐடியின் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், “இந்த படிப்புகள் இந்தியாவை மையமாகக் கொண்ட விளையாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதுடன், சிறந்த அனுபவத்தை அளிக்கக்கூடிய அணுகுமுறையை ஊக்குவிக்கும்.

எதற்காக இந்த புதிய பாடத்திட்டங்கள்: இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் போட்டி விளையாட்டுகளுடன் விளையாட்டுக் களங்களில் நுணுக்கங்களை அறிந்திருப்போருக்கான தேவை அதிகளவில் இருந்து வருகிறது. செயல்திறனை மேம்படுத்துதல், உணவு மற்றும் பயிற்சி அதிர்வெண்கள் போன்றவற்றை கண்காணித்தல், மீட்புத் திட்டங்களை உருவாக்குதல், விளையாட்டு அறிவியலுக்கான முழுமையான அணுகுமுறையை வழங்குதல் போன்றவற்றை கற்பவர்கள் அறிந்துகொள்ள என்பிடெல் பாடத்திட்டங்கள் தயார்படுத்தும்.

12-ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு, வளர்ந்து வரும் இத்துறையை மேலும் அறிந்துகொள்ள என்பிடெல் அறிமுகப் பாடத்தைக் கற்கலாம். விளையாட்டு அறிவியல், பிசியோதெரபி, உடற்கல்வி உள்ளிட்ட இதர தொடர்புடைய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இப்பாடத்திட்டங்கள் பொருத்தமானவையாகும்.

இந்த படிப்பு முடிந்த பின்னர், இதே துறையில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டப்படிப்பை மாணவர்கள் தொடரலாம். சென்னை ஐஐடியின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்விற்கான உயர்சிறப்பு மையம் இந்த களத்திற்கான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. திருப்பத்தூரில் தண்டவாளத்தில் படுத்து விசிகவினர் போராட்டம்!

இதை தொடர்ந்து சென்னை ஐஐடியின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு உயர்சிறப்பு மையத்தின் இணை முதன்மை ஆய்வாளர் மகேஷ் பஞ்சக்நுலா பேசுகையில், “விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது உடலை வலுப்படுத்துதல், உடற்பயிற்சி, உடலை தயார்படுத்தும் பயிற்சி, விளையாட்டு, ஊட்டச்சத்து, உளவியல் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்ட எவருக்கும் இது பொருத்தமான பாடமாகும்” என கூறினார்.

நேரடி இறுதித் தேர்வு: இந்திய தேசிய திறந்தவெளி பாடப்பிரிவுகளுக்கான (MOOCs) இணைய முகவரியான ஸ்வயம் (swayam.gov.in) இணையத்திலும் இந்த பாடங்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்பதிவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கான இறுதித் தேர்வை மையத்தில் நேரடியாக எழுத வேண்டியிருக்கும். இதற்கான தேர்வு கட்டணமாக ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான நபர்களை இப்பாடப்பிரிவுகள் இலக்காக கொண்டிருக்கின்றன. பயோமெக்கானிக்ஸ், காயத்தடுப்பு, விளையாட்டு உளவியல், இந்தியர்களுக்கான வலிமை பயிற்சி, விளையாட்டின் கலாச்சார அம்சங்கள் போன்ற முக்கியமான விளையாட்டுத் தலைப்புகளை இப்பாடப்பிரிவுகள் உள்ளடக்கியிருக்கின்றன.

உடற்பயிற்சி உடலியல், இயக்க அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, காயத்தடுப்பு, பயிற்சி அடிப்படைகள், வலிமை சீரமைப்பு போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும். கோட்பாடு மற்றும் நடைமுறை அறிவு மூலம் பங்கேற்பாளர்கள் விளையாட்டு அறிவியலை ஒரு வெற்றிகரமான தொழிலாக உருவாக்குவதற்கான விலை மதிப்பற்ற நுண்ணறிவைப் பெறுவார்கள். மாணவர்கள் ஐந்து முக்கிய (core) பாடப்பிரிவுகள், இரண்டு விருப்ப (elective) பாடப்பிரிவுகளை முடித்ததும், விளையாட்டு அறிவியலில் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்திய மக்கள்தொகைக்கான வலிமை, உடலை தயார்படுத்தும் பயிற்சி, விளையாட்டு மற்றும் செயல்திறன் ஊட்டச்சத்து, விளையாட்டுப் பயிற்சி, சுமை மேலாண்மை மற்றும் மீட்பின் அடிப்படைகள், விளையாட்டு காயம் தடுப்பு-மறுவாழ்வுக்கான அவசியங்கள், மனித இயக்க அறிவியல், உடற்பயிற்சி உடலியல் மற்றும் விளையாட்டு செயல்திறன் அறிமுகம், விளையாட்டு உளவியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழு நேரில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.