ETV Bharat / state

சென்னை ஐஐடியில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம்...6 வாரத்தில் நடவடிக்கை - ஐஐடி இயக்குநர்

author img

By

Published : May 12, 2023, 7:03 PM IST

Updated : May 13, 2023, 5:21 PM IST

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதால் 6 வாரங்களில் மாணவர்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல் அளித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம்..6 வாரத்தில் நடவடிக்கை - ஐஐடி இயக்குநர்
சென்னை ஐஐடியில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம்..6 வாரத்தில் நடவடிக்கை - ஐஐடி இயக்குநர்

ஐஐடி இயக்குநர் பேட்டி

சென்னை: ஐஐடியில் மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கருத்தரங்கம் இயக்குநர் காம கோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழுமத்தின் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு அளிக்கப்படும் மன நல ஆலோசனைகள் குறித்தும் தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ”சென்னை ஐஐடியில் தற்கொலைகளை பொறுத்தவரை, ஐந்தில் மூன்று பேர் படிப்பில் நன்றாக இருந்தவர்கள் தான். பொதுவாக தற்கொலைகளுக்கு என்று மூன்று காரணங்கள் இருக்கலாம். அவர்களின் சிறுவயது பிரச்சனை, உடல்நலம், பொருளாதாரப் பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை இதில் எது இருந்தாலும் அதனுடன் சேர்ந்து படிப்பும் அவர்களுக்கு அழுத்தமாக மாறி உள்ளது. கரோனா தொற்றுக்குப் பிறகு அனைத்து மாணவர்களும் ஒன்றாக கூடுவது குறைந்துவிட்டது. அதனை சரி செய்ய முயற்சி செய்கிறோம். மன நலம் சார்ந்த சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு வாரத்தில் 25 சதவீதம் பேருக்கு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேரில் 600 பேருக்கு மன அழுத்தம் உள்ளது. அதனைக்கண்டறிவது தான் சவால். 6 வாரங்களுக்குள் முழுவதும் முடித்து விடுவோம். இந்த சர்வே இயக்குநர், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் நடத்தப்படுகிறது. சென்னை ஐஐடியில் பாகுபாடு காரணமாக மன அழுத்தம் என்பது இதுவரை இல்லை. ஆசிரியர்கள் அளவில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவது இல்லை.

ஐஐடியில் சேர்வதற்காக நடத்தப்படும் JEE தேர்வினை எழுதி தகுதிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை ஐஐடியில் சேர்கின்றனர். அவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகள் வழங்கப்படும். ஆனால், ஆசிரியர்கள் யாரும் மதிப்பெண் விவரங்களைக் கேட்பது இல்லை. மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவில் இருந்து அவர்களின் மதிப்பெண்கள் தெரியும். அதிக மதிப்பெண்கள் பெற்று சேர்ந்த மாணவர்களில் 60 ஆண்டுகளில் 3 பேர் மட்டுமே விருதுகளைப் பெற்று உள்ளனர்.

ஐஐடியில் சேர்ந்தப் பின்னர் எந்த மாணவரிடமும் மதிப்பெண்கள் குறித்த பாகுபாடு காட்டப்படுவது இல்லை. சாதிய ரீதியான பாகுபாடும் காட்டப்படுவது இல்லை. சென்னை ஐஐடியில், ஆராய்ச்சி மாணவர் தற்கொலை குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சபீதா, கண்ணகி பாக்கியநாதன், ஐஐடி பேராசிரியர், மாணவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெளி அமைப்பினர் இந்த விசாரணை நடத்தட்டும். அப்போது தான் சரியாக இருக்கும் என்று தான் இந்த விசாரணைக் குழு செயல்படுகிறது. மாணவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் பிரச்னைகளை சொல்லலாம் என்று தெரிவித்து உள்ளோம். எப்படி ஆராய்ச்சி மாணவர்களைக் கையாள வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. விசாரணையில் நிர்வாகம் தலையிடுவதில்லை. அந்த விசாரணை முடிந்த பின் இது குறித்து தெரிவிக்கப்படும்.

சென்னை ஐஐடியில் போதைப்பொருள் பயன்பாட்டை பொறுத்தவரை ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தது. தற்போது அதிக அளவில் குறைந்து உள்ளது. இந்தப் பழக்கம் பள்ளி அளவிலேயே இருக்கிறது, போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் பயன்பாட்டை பொறுத்தவரை கஞ்சா தான் அதிகமாக இருக்கிறது. ஐஐடிக்கு வெளியில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். மேலும் வெளியில் இருந்தும் கஞ்சாவை எடுத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து கண்காணித்து ஹாஸ்டலில் பிடிக்கிறோம். அது போன்ற மாணவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டு வருகிறோம். வெளியில் இருந்து வருபவர்கள் பையில் வைத்தும் எடுத்துவர முடியும். தினமும் 8 ஆயிரம் பேர் வந்து செல்வதால் அனைவரின் பையை பரிசோதித்து அனுப்புவது சிரமமாக இருக்கும். கரோனா தொற்றின்போது மாணவர்கள் வீட்டில் இருந்ததால் அப்போது, மாணவர்களிடம் போதைப் பழக்கம் குறைவாக இருந்துள்ளது.

மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை மாணவர் தலைவர் வழியாகவோ, புகார் மூலமாகவோ அல்லது ஆலோசகர் மூலமாகவோ தெரிவிக்கலாம். எப்படி தெரியவந்தாலும் முறையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். சமீபத்தில் எதிர்பாராத விதமாக நடந்த சில சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க இயன்ற முயற்சிகளை ஐ.ஐ.டி நிர்வாகம் சார்பில் எடுத்து வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் பரபரப்பு - அடுத்தடுத்து சென்னையில் தரை இறங்கிய 14 விமானங்கள்

Last Updated :May 13, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.