ETV Bharat / state

சென்னையில் சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு..! மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 1:50 PM IST

Chennai Corporation announcement: சென்னை மாநகராட்சியின் முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பயனர்கள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை: மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரைநிதியாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு அரைநிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பணிகள்: சென்னையில் உள்ள 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் வாயிலாக, மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998-இன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அவ்வாறு சொத்து வரி செலுத்த தவறும் நிலையில், சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே தெரிவித்து இருந்தது.

வட்டியுடன் செலுத்த வேண்டும்: அதேப்போல், கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேப்போல், சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 1 முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

விழிப்புணர்வு: தற்போது சொத்துவரி செலுத்துவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆங்கே ஆங்கே விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, முக்கிய இடங்களில், ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து செல்கின்றனர். மேலும், சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை, வரிவசூலிப்பாளரிடம் காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது கடன்/பற்று அட்டை மூலமாகவோ செலுத்தலாம்.

மேலும் மாநகராட்சி வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும், நம்ம சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.700 கோடி இலக்கு: சென்னை மாநகராட்சி தற்போது சொத்து வரி இந்த அரையாண்டுக்காக (ஏப்ரல் - செப்டம்பர்) வரை ரூபாய் 700 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த அரையாண்டுக்காக (ஏப்ரல் - செப்டம்பர்) ஏப்ரல் மாதத்திலிருந்து, நேற்றைய தினம் வரை, ரூபாய் 650 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்ட்டுள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது 90 கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாட்களில் ரூ.40 கோடி: 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து இந்த அரையாண்டில், 6.5 லட்சம் பேர் இன்னும் சொத்து வரி செலுத்தவில்லை. இன்னும் ஐந்து நாட்கள் மீதமுள்ள நிலையில், தற்போது கடைசி 5 நாட்களில், ரூபாய் 40 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "சம வேலைக்கு சம ஊதியம்.." இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.