ETV Bharat / state

சென்னையில் சிறுமியை முட்டிய மாடு இதோ... மாட்டுத்தொழுவங்களை திடீர் ஆய்வுசெய்த சென்னை ஆணையர்

author img

By

Published : Aug 10, 2023, 7:11 PM IST

அரும்பாக்கத்தில் சிறுமியை மாடு முட்டிய சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் இருக்கும் மாட்டுத் தொழுவங்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

மாட்டு தொழுவங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
மாட்டு தொழுவங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் சிறுமியை முட்டிய மாடு இதோ... மாட்டுத்தொழுவங்களை திடீர் ஆய்வுசெய்த சென்னை ஆணையர்

சென்னை: சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9). எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்றபோது, சிறுமி ஆயிஷாவை மாடு கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடுவிடாமல் குத்திய நிலையில், அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியைக் காப்பாற்றினர்.

தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் விவேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை மாடு குத்தி வீசிய சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் சிறுமியை முட்டிய மாட்டினை, சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் அந்த மாட்டை பறிமுதல் செய்து பெரம்பூரில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமனா மாட்டு தொழுவதத்தில் விட பட்டுள்ளது. அதனை தொடர் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கால்நடை வைத்திருப்போருக்கு சுகாதாரத்துறை வழங்கியுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

அதைத்தொடர்ந்து சென்னை புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத் தொழுவத்தையும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, "பள்ளியில் இருந்து திரும்பும் சிறுமியை மாடு முட்டிய வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வந்ததன் அடிப்படையில் உடனடியாக அந்த மாட்டை நாங்கள், கன்றுக்குட்டியுடன் பறிமுதல் செய்துள்ளோம்.

சிறுமிக்கு சிகிச்சை: அந்த சிறுமியின் உடல்நிலை தற்போது நன்றாக இருக்கிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது மாடு முட்டி ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், பறிமுதல் செய்த மாடு தொடர் கண்காப்பில் இருக்கிறது.

மாட்டின் நிலைப்பாடு: நேற்றைய நிலையில் சற்று கோபமாக இருந்தது, நாங்கள் அதுக்கு வெறி நோய் இருக்கிறதா என்று பார்த்தோம். ஆனால் இன்று அந்த மாடு சாதாரணமாக உணவை உட்கொண்டு வருகிறது. தேவைப்பட்டால், கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கண்காணிப்புக்காக மாற்றப்படும்.

சென்னை மாநகராட்சியில் தற்போது கால்நடைகளைப் பிடிக்கும் வாகனங்கள் 15 இருக்கிறது. அதில் நாள் ஒன்றுக்கு 60 கால்நடைகளை பிடிக்கிறோம். இந்தாண்டு இதுவரை 2,809 மாடுகள் பிடித்து இருக்கிறோம். மேலும் அதற்கு அபராதமாக ரூ.51.75 லட்சம் அபராதம் விதித்துள்ளோம்.

கால்நடை வளர்ப்புச் சட்டம்: நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு மாடு வளர்க்க 36 சதுர அடி கார்பெட் ஏரியா இருக்க வேண்டும். அதற்குள் தான் அவர்கள் மாட்டை கட்டி வளர்க்க வேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. மீறினால் அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றுவார்கள். இதுதான் இப்போதைக்கு அமலில் இருக்கும் சட்டமாக உள்ளது.

இந்தச் சட்டத்தின் படி மாடுகளை நாங்கள் கைப்பற்றி வந்தாலும் ஓரிரு நாட்களில் ரூ.2000 அபராதம் செலுத்திவிட்டு மாட்டை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். எனவே, நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை. சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை" - சென்னை ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.