ETV Bharat / state

"சிபிஐ அதிகாரிகள் சொத்துகளை சரியாக மதிப்பிடவில்லை" - சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி!

author img

By

Published : May 16, 2023, 2:03 PM IST

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்த அரசு அதிகாரி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai
சென்னை

சென்னை: டெல்லியைச் சேர்ந்த ராஜீவ் கோலி என்பவர் சென்னை துறைமுகத்தில் 1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பைலட், டாக் மாஸ்டர், ஹார்பர் மாஸ்டர் போன்ற பணிகளை ஆற்றி வந்தார். இவர் 1990 முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 27 லட்சத்து 23 ஆயிரத்து 475 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், இது அவரது வருமனத்தை விட 71.88 சதவீதம் அதிகம் என்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்குத் தொடர்பாக 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்த வழக்கை இன்று(மே.16) விசாரித்த நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலிகான், சிபிஐ மற்றும் ராஜீவ் கோலி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வருமான விவரங்கள், வருமான வரி கணக்குகளின் அடிப்படையில், குறிப்பிட்ட ஆண்டுகளில் 26 லட்சத்து 53 ஆயிரத்து 270 ரூபாயை சம்பளமாகவே வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த சம்பள வருமானம் மட்டும் அல்லாமல் பிற சொத்துகள் மூலமாக வாடகை வருவாய், வங்கி முதலீடுகளில் வட்டி மூலமும் வருமானம் வந்துள்ளதையும், அவரது செலவுகளையும் கணக்கிட்டு, 4 லட்சத்து 73 ஆயிரத்து 683 ரூபாய் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது அவரது வருமானத்தைவிட 9.37 சதவீதம் மட்டுமே அதிகம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலையில் சேர்ந்தது முதல் ராஜீவ் கோலிக்கு சேமிப்பு பழக்கமும் இருந்துள்ளதாகவும், ஒவ்வொரு அரசு ஊழியரும் சேமிக்கும் அளவுக்கே இது இருப்பதாகவும் கூறினார். அதனால், 27 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் கூறிய குற்றச்சாட்டுகளை, போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வருமானம் மற்றும் சொத்துகளை கூடுதலாக மதிப்பீடு செய்யாமல், முறையான வகையில் கணக்கீடு செய்திருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது என்றும், மனுதாரரின் 20 ஆண்டுகால வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது எனவும் நீதிபதி தெரிவித்தார். தாமதத்திற்கான பழியை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இல்லை எனவும், நீதி வழங்க 20 ஆண்டுகள் ஆனதற்கு நீதிமன்றம் வருத்தத்தைப் பதிவு செய்வதாகவும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெஹபூப் அலி கான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதியம் 12 - 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்: முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.