ETV Bharat / state

'ரூ.154.4 கோடி சொத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பு' - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

author img

By

Published : Jan 4, 2022, 8:53 AM IST

குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.154.4 கோடி சொத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

சென்னை: மத்திய குற்றப்பிரிவின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த ஆண்டு மட்டும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 478 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கணினி வழி குற்றங்களில் மட்டும் 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணையை முடித்து 732 வழக்குகளின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 121 வழக்குகள் கணினி வழி குற்றப்பிரிவிலும், 171 வழக்குகள் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 929 மனுக்கள் பெறப்பட்டு, 7 ஆயிரத்து 216 மனுக்களின் விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆவண மோசடி, போலி ஆவண மோசடி பிரிவில் 2 ஆயிரத்து 802 மனுக்கள் பெறப்பட்டு, 2 ஆயிரத்து 474 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளன.

154.4 கோடி சொத்துக்கள் ஒப்படைப்பு

கணினி வழி குற்றப்பிரிவில் ஆயிரத்து 853 மனுக்கள் பெறப்பட்டு, ஆயிரத்து 518 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளன. நில அபகரிப்பு பிரிவில் பெறப்பட்ட ஆயிரத்து 530 மனுக்களில், ஆயிரத்து 347 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் விசாரணை வழக்குகளில் 571 பேர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் 186 பேர், வங்கி மோசடி பிரிவில் 95 பேர், வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் 78 பேர், ஆவண மற்றும் போலி ஆவண மோசடி பிரிவில் 76 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 58 நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

அதிகபட்சமாக நில அபகரிப்பில் 16 பேர், கணினிவழி குற்றங்களில் 14 பேர், வேலைவாய்ப்பு மோசடி குற்றங்களில் 10 பேர் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 154.4 கோடி சொத்துக்கள் பெறப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5.80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கணினி வழி குற்றப் பிரிவில் வழக்கின் சொத்துக்களாக 82 மொபைல்போன், 105 சிம்கார்டுகள், 100 பாஸ்புக், 22 பான் கார்டுகள், 128 ஆதார் அடையாள அட்டைகள், 12 லேப்டாப், 180 டெபிட் கார்டு, 5 நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம், 55 சவரன் தங்கநகை, 11 கிலோ வெள்ளி, 51 லட்சத்து 48 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போதை பொருட்களை விற்பனை செய்த 80 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.