ETV Bharat / state

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து கருத்து.. தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 9:14 PM IST

Thamizhachi Thangapandian Comment on Prabhakaran: தமிழச்சி தங்கபாண்டியனின் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் இருந்து ஒருசேர எதிர்ப்பலைகள் எழுந்து வருவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

controversial on Thamizhachi Thangapandian Comment on Prabhakaran
பிரபாகரன் குறித்த தமிழச்சி தங்கபாண்டியனின் கருத்து சர்ச்சை

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்து கூறிய கருத்துக்கு பாஜக மற்றும் தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு சேர எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில், வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஆளுமையுடன் உணவருந்த நீங்கள் விரும்பினால் யாருடன்? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் என்று பதிலளித்தார்.

மேலும் அவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் அவரிடம் என்ன கேட்பீர்கள்? என்ற கேள்விக்கு, முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு மன்னிப்பு கோருவேன் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் பதிலளித்தார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழச்சி தங்கபாண்டியனின் பதில்கள் குறித்து சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தனது X வலைதள பக்கத்தில், "பிரபாகரனை புகழ்வதை ஒரு போதும் காங்கிரஸில் இருக்கும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 17 தமிழர்களுடன் சேர்ந்து ராஜீவ் காந்தியை படுகொலை செய்துவிட்டு மழுப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரபாகரன், வீரப்பன் தமிழ்தேசம் என்பது இந்துத்துவா தேசியவாதத்தை போன்றது" என பதிவிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய சூழலில், ஏற்கனவே கூட்டணியில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் இடையே, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த கருத்து மேலும் விவாதத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

காங்கிரஸ் ஒரு பக்கம் இருக்க, தமிழச்சி தங்கபாண்டியன் கருத்துக்கு பாஜகவும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "இவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? முள்ளி வாய்க்கால் படுகொலை விவகாரத்திற்கு காரணம் திமுக தான் என்ற ஒப்புதல் வாக்குமூலமே இதை உணர்த்துகிறது.

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறதோ?. இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை, முன்னாள் பிரதமரை கொன்ற ஒரு இயக்கத்தை வழி நடத்திய ஒருவரை, தேசிய தலைவர் என்று ஒரு நாடாராளுமன்ற உறுப்பினர் சொல்வது திமுகவின் ஆணவம். இப்போது கூட தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கு ரோஷம் வரவில்லை என்றால், அது வெட்கக்கேடே" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு..! 2,500 பணியிடங்களுக்கு 28,500 பேர் விண்ணப்பம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.