ETV Bharat / state

பாரத் நெட் திட்டத்துக்குத் தடை இல்லை, ஸ்டாலின் சொல்வது பொய் - ஆர்பி உதயகுமார்

author img

By

Published : May 7, 2020, 8:04 AM IST

சென்னை : பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு தடை செய்யவில்லை என்றும், இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

rb udhyakumar
rb udhyakumar

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

“பாரத் நெட்” திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளைக் கண்ணாடி இழை (Optical fiber) மூலம் இணைக்கும் உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும்.

பாரத் நெட் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள இணையதள வலையங்களான “தேசிய அறிவுத்திறன் வலையமைப்பு“ (National knowledge network) “தமிழ்நாடு மாநில பெரும் பரப்பு வலையமைப்பு” (TASWAN ) மற்றும் காவல்துறையின் இணையதளம் (Police network) ஆகிய அனைத்து வலை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கிராமப்புற மக்களுக்கு இணையதள சேவைகளை வழங்கி சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களை மேம்படுத்த இத்திட்டம் இணைப்பு பாலமாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET ) டிசம்பர் 5, 2019 அன்று வலைத்தளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. அதன் பின்பு ஒப்பந்தப் புள்ளிக்கான முன்னோடி கூட்டம் (pre- bid) 21.2.2020 அன்று நடத்தப்பட்டது.

இதனிடையில், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை இத்திட்டத்தை 31.3.2021-க்குள் தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு இணையதள சேவைகளைக் கொண்டு சேர்க்க இத்திட்டத்தினை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவது மாநில அரசுக்கு இன்றியமையாதது ஆகும்.

ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்து ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்ற வேளையில், எதிர்பாராதவிதமாக இந்தியா முழுமைக்கும் கரோனா நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமலுக்கு வந்து இன்று வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ளது.

திட்டத்தின் அவசியம்

பாரத் நெட் திட்டம், இயற்கை பேரிடர் காலங்களில் கூட கிராமங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பினை உறுதி செய்யும் வகையில் திறம்பட செயல்படுத்தப்படும். தற்போது ஒன்றிய அளவில் மட்டுமே தமிழ்நாட்டில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் உள்ளன. இதனால் இயற்கை பேரிடர் காலங்களில், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைக் கிராமப்புறங்களில் மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

சிறந்த தகவல் தொடர்பு கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே கோவிட்-19 போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பான தகவல் தொடர்பினை மேற்கொள்ள முடியும். தகவல் தொடர்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றால் பாரத் நெட் திட்டத்தினை மத்திய அரசு நிர்ணயித்த ஒன்பது மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், முன் அனுபவம் மற்றும் பொருளாதார திறன்கள் மிக்க ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்தெடுத்து மத்திய அரசு நிர்ணயித்த காலத்திற்குள், அதாவது மார்ச் 2021-க்குள் பாரத்நெட் திட்டத்தினை நிறைவேற்ற திருத்திய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பான அறிக்கை

“50 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும்” என்ற மத்திய அரசின் வரைமுறையை (Make in India) மீறி உள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதில் எந்த வரையறை மீறல்களும் இல்லை.

ஆனால், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தப் புள்ளி வரையறைகளில், உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் 50 சதவீதத்திற்கு மேலாகப் பங்கேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தப் புள்ளியில், உள்நாட்டு தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது.

ஆனால், அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் (ஸ்டாலின்) இட்டுக்கட்டி உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையாக உள்ளது.

ஒரு புகார் மீது மத்திய அரசு வழக்கமான முறையில் அறிக்கை கோரிய ஒரு கடித குறிப்பின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் “பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு தடை“ இருப்பதாகவும், ஊழல் தலை விரித்து ஆடுவது உறுதியாகி இருப்பதாகவும்” என்று உண்மையைத் திரித்து அரசியல் செய்வது வியப்பாக உள்ளது.

திட்டத்துக்குத் தடை இல்லை

மத்திய அரசு, பாரத் நெட் பாரத் நெட் ஒப்பந்தப் புள்ளிகளுக்குத் தடை ஏதும் செய்யவில்லை செய்யவில்லை செய்யவில்லை. பாரத் நெட் ஒப்பந்தப் புள்ளியின் உண்மை நிலவரம் குறித்து இரண்டு முறை விளக்கமாகவும் ஆதாரத்தோடும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தெளிவு படுத்தி உள்ளேன். அரசு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.