ETV Bharat / state

இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் எடுத்துவச்சு யூஸ் பண்றீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 5:07 PM IST

why we should avoid over fermented idli dosa batter: நாள்தோறும் இட்லி, தோசை மாவை அரைத்து பயன்படுத்தனுமா? என்னால முடியாது சாமி என சோம்பேறித்தனப்படும் உங்களுக்காகத்தான் இந்த தொகுப்பு.

இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் எடுத்துவச்சு யூஸ் பண்றீங்களா?
இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் எடுத்துவச்சு யூஸ் பண்றீங்களா?

சென்னை: கடைகளுக்கு சென்று பொருள் வாங்கும்போதும் சரி, வீடுகளிலும் சரி உணவுப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தும் விரைவில் கெட்டுப்போகக்கூடாது என்ற அடிப்படையில் பார்த்துப் பார்த்து வாங்குவோம் அல்லது தயாரிப்போம். ஆனால் உங்களுக்கு தெரியுமா? அதற்கான நேரம் கடந்து கெட்டுப்போகாமல் இருக்கும் எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. சில நேரங்களில் அது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகளை தந்துவிடும்.

அப்படி குறிப்பிட்டு ஒன்றை சொல்ல வேண்டும் என்றால், நம் வீடுகளில் இட்லி மற்றும் தோசைக்காக ஆட்டப்படும் மாவை சொல்லலாம். இந்த குளிர்சாதன பெட்டிகள் வந்த பிறகு அனைத்து வீடுகளிலும் இட்லி மற்றும் தோசை மாவு குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை எடுத்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா? தீங்கு என்றால், அது எந்த வகையில் உங்களை பாதிக்கும் என மருத்துவர்கள் வழங்கிய தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்;

  • நீங்கள் உட்கொள்ளும் உணவின் அதிகப்படியான பலன்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் முழுமையாக பெற வேண்டும் என்றால், அந்த உணவின் உயிர்ப்புத் தன்மை அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் உட்கொள்ளுதல் வேண்டும்.
  • இட்லி மற்றும் தோசை மாவை அரைத்து 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு தேவையான அளவு அரசி, உளுந்தை ஆட்டி, குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கக்கூடாது.
  • குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பயன்படுத்தும் மாவு அதன் உயிர்ப்பு தன்மை மற்றும் அதன் எதார்த்த சுவையை முழுமையாக இழந்திருக்கும். அதை நீங்கள் உட்கொள்வதால் உங்களுக்குப் பசி அடங்குமே தவிர உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
  • மாவு புளிக்காமல் இருக்க உப்பு போடாமல் எடுத்து வைப்பது, சோடா உப்பு கலக்காமல் இருப்பது போன்றவைகளை மேற்கொண்டால், மாவு உயிர்ப்பு தன்மையோடு இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறு. புளிக்கும் (நொதிக்கும்) நேரம் வேண்டுமானால் கொஞ்சம் அதிகரிக்கலாம், ஆனால் புளிக்காமல் இருக்காது.

மாவை புளிக்க வைக்க பயன்படுத்தும் பொருட்களால் வரும் ஆபத்துகள்;

மாவை ஆட்டி வைத்தால் நல்ல பாக்டீரியாக்கள் மூலம் அதுவே புளித்துவிடும். ஆனால் உணவகங்கள் மற்றும் சில வீடுகளில் சில மணி நேரத்தில் ஆட்டிய மாவை பயன்படுத்த முயல்வார்கள். அதற்காக மாவை தானாக புளிக்க விடாமல் சில பொருட்களை அதில் கலந்து புளிக்க வைப்பார்கள்.

அவை; ஈஸ்ட், சோடா உப்பு, கார்பன் டை ஆக்சைடு வாயு, தயிர் உள்ளிட்ட பல சந்தைகளில் கிடைக்கின்றன.

இவை மாவுகளுக்கு மட்டும்தானா; இட்லி, தோசை மாவுகளை கடந்து பேக்கரிகளில் விற்கப்படும் கேக், பிஸ்கட், பன், அப்பம் உள்ளிட்ட பல இனிப்பு பண்டங்களிலும் கலக்கப்படுகிறது.

இதையும் படிங்க: உப்பு அதிகம் உட்கொண்டால் ஆயுட்காலம் குறையுமா? சொல்லவே இல்ல.!

அதிகம் புளித்த மாவை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்;

புதிதாக தயாரிக்கும் மாவுக்கும், சேமித்து வைத்த மாவுக்கும் இடையே அதிக அளவிலான வேறுபாடுகள் உள்ளன. நல்ல பேக்டீரியாக்களே மாவை புளிக்க வைத்தாலும், அது அதிக அளவில் புளிக்கும்போது உட்கொள்ள உகந்தது அல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் உடலில் ஏற்படும் விளைவுகள்,

  • நெஞ்செரிச்சல்
  • செரிமான கோளாறு
  • வயிற்றில் தொற்று
  • குடல் தொடர்பான பிரச்சனை
  • பசியின்மை
  • தலைவலி
  • தூக்கமின்மை

உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாவு முழுவதும் புளித்த பின்னர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதனை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், நீங்கள் உங்கள் வாழ்நாளில் நாள்தோறும் உட்கொள்ளும் காலை உணவான இட்லி, தோசை போன்ற உணவுகளை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து கெட்டுப்போன மாவால் ஆன உணவை உட்கொள்ளும்போது காலப்போக்கில் பல்வேறு நீண்டகால நோய்களுக்கு அது வழிவகை செய்யும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மாவு அதிகம் புளித்துவிட்டதை எப்படி தெரிந்துகொள்வது? :

  • துர்நாற்றம் வீசுவது
  • அதிகப்படியான புளிப்பு சுவை
  • மாவின் மீது எண்ணெய் போன்ற மெல்லிய படிமம் உருவாவது

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் காலம் கடந்து கெட்டுப்போகாமல் இருக்கும் எந்த பொருளும் அதன் உயிர்ப்பு தன்மையோடு இருக்காது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

இதையும் படிங்க: 'கும்குவாட்' பழம்பற்றித் தெரியுமா? பல உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.