ETV Bharat / state

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. நாசர் மகன் நீக்கத்திற்கு காரணம் இது தான்..

author img

By

Published : Feb 9, 2023, 8:36 PM IST

தமிழ்நாடு அமைச்சர் ஆவடி நாசரின் மகன் வகித்து வந்த கட்சிப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி என்பதற்கு இதுதான் உதாரணம் என்கிறார் கட்சியின் செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: திமுகவைப் பொருத்தவரையிலும் ஆரம்பநாட்களில் இருந்தே மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான கரங்களில் ஒருவராக செயல்பட்டு வந்தவர்தான் ஆவடி நாசர். மேயர், எம்எல்ஏ, அமைச்சர் என படிப்படியாக உயர்ந்திருக்கும் நாசர், சமீபத்தில் திமுக நிர்வாகி ஒருவரை நோக்கி கல்லெறிந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்த நாசரின் மகன் எஸ்.என். ஆசிம்ராஜா அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான துரைமுருகனின் அறிக்கையில், "கழகப் பணிகள் செவ்வனே நடைபெற ஆசிம்ராஜாவுக்கு பதிலாக திருமுல்லைவாயல் காந்திபுரத்தை சேர்ந்த சன்பிரகாஷ் ஆவடி மாநகர கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்த போது, அப்பா நாசர் அமைச்சர், மாவட்டச் செயலாளர், மகன் ஆவடி நகராட்சி பணி நியமனக்குழுத் தலைவர், மாநகர செயலாளர் என ஒரே குடும்பத்தில் அனைத்து பதவிகளும் குவிந்து கிடப்பது திருவள்ளூர் மாவட்டத் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றனர்.

சர்ச்சை நாயகனாக வலம் வந்த அசீம் ராஜா: உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு மகன் அசீம் ராஜாவை மாநகராட்சி பணி நியமனக்குழு தலைவராக ஆக்கிவிட்டார் அமைச்சர் நாசர். அசீம் ராஜா கை காட்டும் நபருக்குத்தான் மாநகராட்சி டெண்டர் என்ற நிலையை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திமுக கட்சியினருக்குக் கூட டெண்டர் கொடுப்பதில்லை. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அலெக்சாண்டரின் உறவினருக்கு டெண்டர் கொடுத்துள்ளார் என பெயர் தெரிவிக்க விரும்பாத நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.

டெண்டர் மட்டுமின்றி கட்சியில் பணத்தை வாங்கிக் கொண்டு பொறுப்புப் போட்டுள்ளார் என்றும். ஆவினில் வேலை வாங்கித்தருவதாக மோசடிச் செய்துள்ளதாகவும் அசீம்ராஜா மீது அடுக்கடுக்கான புகார்கள் தலைமை கழகத்திற்கு பறந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் நாசருக்கு எதிரான அணியினர் மொழிப்போர் தியாகிகள் நினைவுப் பொதுக்கூட்டத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆதாரத்துடன் கோப்புகளை ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் திமுக தலைமை, அசிம் ராஜாவை நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி வைத்துள்ளது.

இதுகுறித்து தொலைபேசி வாயிலாக பேசிய திமுக செய்தித் தொடர்புத்துறை தலைவர் டிகேஎஸ். இளங்கோவனிடம் பேசுகையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரான ஸ்டாலினுக்கு வந்த செய்தியின் அடிப்படையில், நகரச் செயலாளரை மாற்றியுள்ளார். கட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி என்பதை முதல்வர் வெளிப்படுத்தி இருக்கிறார் என கூறினார். நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையுடன் இதனை செய்திருக்கிறார் என்பதோடு தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

ஈரோடு தேர்தல் குறித்து கேட்ட போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரை திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிவு தற்போது இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்த நேரத்திலும் ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம் என்றார், திமுக அமைச்சர்கள் தேர்தல் முறைகேடு செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது முற்றிலும் தவறானது என கூறிய இளங்கோவன், அங்கு மத்திய காவல் படை, தமிழக காவல்துறை உள்ளிட்டவை பாதுகாப்புக்காக இருக்கிறது. இவர்களை மீறி அதிமுக முறைகேடு செய்யாமல் இருந்தால் சரி என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.