ETV Bharat / state

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்: நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு

author img

By

Published : Sep 17, 2021, 3:47 PM IST

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு (மாவட்ட ஆட்சியர்கள்) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்குள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் அறிவிக்கைகளையும், ஏனைய 28 மாவட்டங்களுக்குள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மாவட்ட உலராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு செப்டம்பர் 15 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்

"அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்.

ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட நிருவாகம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதனை மக்கள் உணரச் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என ஆணையிட்டுள்ளது.

மேலும், "ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: 2020இல் சாதி, மத மோதல் இரு மடங்கு அதிகரிப்பு - என்.சி.ஆர்.பி. தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.