ETV Bharat / state

கொள்ளை வழக்கு விசாரணைக்காக சென்ற பெண் காவலர்கள் மீது தாக்குதல்!

author img

By

Published : Mar 13, 2023, 7:41 PM IST

சென்னையில் கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, விசாரணைக்காக சென்ற பெண் காவலர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலர்கள் மீது தாக்குதல்
பெண் காவலர்கள் மீது தாக்குதல்

சென்னை: குமரன் காலனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (65) கோனிகா கலர் லேப்பின் உரிமையாளர் ஆவார். கடந்த மாதம் 22ம் தேதி குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு சென்றிருந்தார். பின்னர் 28ம் தேதி வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 66 சவரன் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு, டிவி.ஆர் கருவிகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தோஷ் குமாரின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் சந்தோஷ் குமாரின் வீட்டின் அருகே சந்தேகப்படும் படியான நபர்களின் ஆள் நடமாட்டம் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்த சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், இக்கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி, காவலர் இலக்கியா ஆகியோர் ஆற்காடு சாலையில் உள்ள சுரேஷ் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றுள்ளனர். அப்போது இருவரும் சுரேஷின் வீட்டுக்கு பதிலாக அருகே வசிக்கும் பொன்னுவேலின் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது குடிபோதையில் இருந்த பொன்னுவேல், எந்த காரணமும் இல்லாமல் என் வீட்டு வளாகத்துக்குள் எப்படி நுழையலாம் என கேட்டு தகராறு செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சிலரும் ஒன்றுகூடி, பெண் காவலர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், காவலர்கள் இருவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், பெண் காவலர்கள் இருவரையும் மீட்டனர். பின்னர் காவலர்களை தாக்கிய பொன்னுவேல், சுகுமார் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சென்ற காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: என்எல்சி விவகாரம்: "தமிழ்நாடு அரசு உடந்தையாக இருக்கக் கூடாது"-அன்புமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.