ETV Bharat / state

நாகரிக வளர்ச்சியில் தமிழர்கள் மறந்துபோன மாவலி; தயாரிப்பது எப்படி?

author img

By

Published : Dec 8, 2022, 6:04 PM IST

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இளைஞர்கள் பாரம்பரியமான பனைமரப்பூவில் மாவலி தயாரித்து சுற்றி வருகின்றனர்.

பாரம்பரிய மாவலி தயாரித்து சுற்றும் இளைஞர்கள்
பாரம்பரிய மாவலி தயாரித்து சுற்றும் இளைஞர்கள்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெற்று முடிந்தது. இதில் முக்கிய விழாவான தீபத் திருவிழாவில் 10ஆவது நாள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றபட்டது.

இந்த தீபத்தன்று கிராம மற்றும் நகர்ப் பகுதிகளில் பனை மரத்து பூவில் செய்யப்பட்ட மாவலி சுற்றுவது ஆண்டாண்டுகளாக நடைபெற்று வரும் பழக்கம். தற்போது நாகரிக வளர்ச்சியாலும், வாணவேடிக்கையாலும் மறந்துபோன மாவலி சுற்றுவதை, இன்னும் நிறுத்தாத கிராமத்து இளைஞர்கள் தற்பொழுது அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ஆண் பனை மரத்தில் மட்டுமே பூக்கும் பூக்களை பறித்துவந்து வெயிலில் உலர்த்தி, பின்னர் உலர்ந்து காயவைக்கப்பட்ட பனை மரப்பூவை, தரையில் பள்ளம் வெட்டி, அவற்றை அதனுள் போட்டு தீயிட்டு எரிக்கின்றனர்.

அந்த பனை மரப்பூ நெருப்பாகும் வரை எறிக்கப்படுகிறது. பின்னர் அந்த பள்ளத்தை மண்ணைக் கொண்டு மூடுகின்றனர். மண் இட்டு மூடுவதால் நெருப்பாய் இருந்த பனை மரப்பூ கறியாக மாறுகின்றது. அதனை உரலில் இடித்து தூளாக்கி, துணியில் பந்தாக கட்டுகின்றனர். இந்த பந்தினை பனை ஓலையில் குச்சியில் வைத்து கட்டப்பட்டு மாவலி செய்கின்றனர்.

இதனை கார்த்திகை தீபத்திருநாள் அன்று பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, அந்த மாவலி பந்தின் மீது நெருப்பு வைத்து சுழற்றுகின்றனர். இதனால் நெருப்பு பொறியாக வெளிப்படுகிறது. இது கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் மறுநாளும் என இரண்டு நாட்கள் மாவலி சுற்றப்படுகிறது. இதனை சுற்றுவதன் மூலம் தங்களுக்கு நோய் நொடி இன்றி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர், கிராமத்து இளைஞர்கள்.

பாரம்பரிய மாவலி தயாரித்து சுற்றும் இளைஞர்கள்

அதுமட்டுமல்லாது, தலைமுறை தலைமுறையாக கார்த்திகை தீபத்தன்று சுற்றப்பட்டு வரும் மாவலி, தற்போது நாகரிக வளர்ச்சியின் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் காணாமல் போனதாகவும், இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகவேண்டும் என்ற நோக்கத்தோடு மாவலி சுற்றுவது ஆண்டுதோறும் தவறாமல் செய்து வருவதாகவும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் கால்கோள் விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.