ETV Bharat / state

சென்னையில் சுமார் 44 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் - மாநகராட்சி!

author img

By

Published : Jul 22, 2022, 10:45 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் கரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் சுமார் 44 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்
சென்னையில் சுமார் 44 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்

சென்னையில் நடைபெற்ற 31 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 39,32,113 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,33,219 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 47,79,601 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் வரும் (ஞாயிற்றுக்கிழமை) அன்று 32ஆவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1000 சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த , மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இதுவரை 47,77,906 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 3,43,738 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 44,34,168 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் 4ஆம் வகுப்பு மாணவனுக்கு குரங்கம்மை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.