ETV Bharat / state

திமுக என்றாலே மின்வெட்டு..! - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி

author img

By

Published : Apr 26, 2022, 10:45 PM IST

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னை குறித்து முன்னாள் மின்துறை அமைச்சருக்கும் இந்நாள் மின்துறை அமைச்சருக்கும் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நிகழ்ந்தேறியது.

’திமுக என்றாலே மின்வெட்டு..!’ - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி
’திமுக என்றாலே மின்வெட்டு..!’ - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை: சட்டப்பேரவையில் எரிசக்தித்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், நிர்வாகத்தில் தவறு உள்ளது என்றும், தடை இல்லா மின்சாரம் வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும் தெரிவித்தார்.

இதை எதிர்த்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர் என்றும், 2 நாட்கள் மின் வெட்டு இருந்தது, ஆனால் அது சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் தற்போது உள்ளதாகவும் தெரிவித்தார். நிர்வாகம் சரியில்லை என்றால் இடையில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கூறிய அவர், எந்த இடத்தில் நிர்வாகத்தின் தவறு என்று சுட்டி காட்டினால் அதற்கு நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின் உற்பத்தியில் மிகை மாநிலத்தில் மின்வெட்டா..?: இதை எதிர்த்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,’ 3 மாத தேவைக்கான மின்சாரத்தை முன்கூட்டியே ஏன் வாங்கவில்லை ? எனக் கேள்வி எழுப்பினார்.

அதைத் தான் நிர்வாகக் கோளாறு எனக் கூறுவதாகவும், முன்பு அணிலால் மின்வெட்டு ஏற்பட்டது என்று கூறினார் அமைச்சர், இப்போது நிலக்கரி பற்றாக்குறை என்கிறார் எனவும், எந்த மாநிலமாவது சொந்த மின் உற்பத்தியில் மிகை மாநிலம் என்ற பெயரை எடுத்துள்ளதா? மிகை மாநிலம் என்று சொல்லும்போது மின் வெட்டு வருகிறது; அதனால் தான் பேசுவதாகக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, குறுகிய காலத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், கொள்கை விளக்கக் குறிப்பில் தெளிவாக உள்ளது என்றும், கடந்த காலத்தில் மின் வெட்டு இல்லை எனக் கூறுகிறார்கள், ஆனால் 2018-ல் 59 மணி நேரம் 58 நிமிடங்கள், 2019-ல் 39 மணி நேரம் 20 நிமிடங்கள், 2020ல் 32மணி நேரம் 80 நிமிடங்கள், 2021ல் தொடர் மின் வெட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், 2018ல் நுகர்வோர் பற்றாக்குறை 76.91 மில்லியன் யூனிட் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

திமுக என்றாலே மின்வெட்டு..! : இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, ”திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு, அதிமுக ஆட்சி என்றாலே தடையில்லா மின்சாரம் என்பது தான் நிலை” என்றார்.

இதை எதிர்த்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ’முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின் வெட்டு, மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், கடந்த காலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும்’ தெரிவித்தார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி அதிக அளவில் மின்சாரத்தை வழங்கியது போலவும், ஓராண்டில் ஏதோ புதிய மின் உற்பத்திக்கான திட்டங்கள் வராதது போலவும், வரும் ஆண்டுகளில் சூழல் மாறுபடும் என்பதைப் போலவும் முன்னாள் அமைச்சர் கருத்து கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இரவில் கனவு கண்டாலும், பகல் கனவு கண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் மின்வெட்டு இருக்காது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஓடிடி ரீலிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.