ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிபந்தனைகள்: தளர்வுக்கு வாய்ப்புள்ளதா?

author img

By

Published : Aug 20, 2020, 1:30 PM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா என்று தமிழ்நாடு அரசிடம் வினவிய சென்னை உயர் நீதிமன்றம், அதற்குப் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Any possible to allow Vinayagar immolation, notice to state MHC
Any possible to allow Vinayagar immolation, notice to state MHC

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாலும், மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயமாக இருப்பதாலும் அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? எனத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் விஜயநாராயணிடம் கேள்வி எழுப்பினர்.

கரோனா தொற்று சூழல் குறித்து தாங்கள் நன்கு அறிந்து உள்ளதாகவும், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சிலையை வைத்து வழிபட்ட பின் பேரிடர் விதிகளைக் கடைப்பிடித்து ஐந்து அல்லது ஆறு பேர் மிகாமல் சிலையை, பெரிய கோயில்களின் அருகில் வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்துவிடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? எனவும் நீதிபதிகள் வினா எழுப்பினர்.

அதற்கு, அரசுத் தரப்புத் தலைமை வழக்குரைஞர், அரசின் விளக்கத்தைப் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (ஆகஸ்ட்21) ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.