ETV Bharat / state

வடிவேலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம்? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் விளக்கம்

author img

By

Published : Mar 1, 2023, 5:21 PM IST

தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலி என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

வடிவேலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம்? - துணைவேந்தர் விளக்கம்
வடிவேலு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம்? - துணைவேந்தர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த முழு பேட்டி

சென்னை: சர்வதேச ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற பெயரில் அரசின் முத்திரையைப் பயன்படுத்தி, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். ஆனால், தற்போது இவை அனைத்தும் போலியான டாக்டர் பட்டம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், “அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கில் இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர்.

அதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கை வாடகைக்கு அரை நாளுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட லெட்டர் பேடுடன் வந்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கேட்டுனர். ஓய்வுபெற்ற நீதிபதியின் கடிதம் என்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விருது வழங்குவதற்கான நிகழ்ச்சி என்பதால், அனுமதி வழங்கப்பட்டது.

அதில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை பயன்படுத்தியது கண்டிக்கத்தது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் ஏமாந்துள்ளார். வள்ளிநாயகத்திடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது எனவும், எங்களிடம் வள்ளிநாயகம் வருகிறார் எனவும் கூறி ஏமாற்றி உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கம் புனிதமான இடம். இந்த இடத்தில் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பல்கலைக்கழகத்தின் பதிவாளர், கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய உள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைத் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது புகார் அளிக்கப்பட உள்ளது.

ஆன்ட்டி கரப்ஷன் என்ற பெயரில் கரப்ஷன் செய்து விட்டார்கள். மேலும் இந்த கடிதம் குறித்து அவரிடம் (வள்ளிநாயகம்) கேட்க முற்பட்டும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. விவேகானந்தா ஆடிட்டோரியத்தினை வாடகைக்கு அளிக்கும்போது அனைத்தையும் ஆய்வு செய்ய முடியாது. பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் வாடகைக்கு கேட்கும்போது வழங்கி வருகிறோம்.

முன்னாள் நீதிபதி வள்ளி நாயகம் கடிதம் கொடுத்திருக்கமாட்டார் என கருதுகிறோம். அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் காவல் துறையில் புகார் அளித்து, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் நேரம் பார்த்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அந்த நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் யாரும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கை இனிமேல் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு தருவதில்லை என முடிவெடுக்க உள்ளோம். அரசு நிகழ்ச்சிக்கு நடைபெறும் வாடகையை குறைக்க வேண்டும் என்றால், துணைவேந்தர் அனுமதி தேவைப்படும். கட்டணத்தை முழுமையாகச் செலுத்தினால் முதல்வரே அனுமதி வழங்கலாம்.

அதன் அடிப்படையில் அரை நாள் நிகழ்ச்சி நடத்தியதற்கு 58,000 ரூபாய் வாடகையாக வங்கியில் செலுத்தியுள்ளனர். இந்த பரிந்துரை கடிதத்தை, இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் அமைப்பின் இயக்குநர் ஹரீஷ் முதலில் கொடுத்துள்ளார். கவுரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகம்தான் வழங்க வேண்டும். ஒரு அமைப்பு வழங்க முடியாது.

அதில் வாங்கியவர்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிந்து கொண்டு இருக்கலாம். அந்த அமைப்பின் மூலம் பணம் கொடுத்து வாங்கியவர்களும், ஏமாற்றப்பட்டது தெரிந்தாலும் அமைதியாகவே இருப்பார்கள். டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் வந்த பின்னர், தவறு நடந்ததை தெரிந்து கொண்டிருப்பார்.

அண்ணா பல்கலைக் கழகம் பட்டம் வழங்கியதாக குறிப்பிடப்படவில்லை. நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்னர் யார் வழங்குகிறார்கள் என்பதை பார்த்துச் செல்ல வேண்டும் என்ற படிப்பினையாக இது இருக்கிறது. பல்கலைக்கழகத்தால் மட்டுமே பட்டம் வழங்க முடியும் என்பதை வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயர் கல்வித்துறைச் செயலாளர், வேந்தரின் செயலகத்திற்கும் தகவல் அளித்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளனர். எனவே, நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு அமைப்பின் பெயரில் பட்டம் வழங்க முடியாது என்பது கூட தெரியாமல் வந்து பெற்றுச் சென்றுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். வாடகைக்கு விடுவதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள், அமைப்புகள் வழங்கும் பட்டத்தை வாங்காமல் தவிர்க்க வேண்டும். போலியாக வழங்கப்படும் பட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழுதான் கட்டுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கற்றவர்கள் கையால் டாக்டர் விருது.. நான் படிக்காதவன்..' - நகைச்சுவை நடிகர் வடிவேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.