ETV Bharat / state

பி.இ படிக்க நினைக்கும் மாணவர்களின் கனிவான கவனத்திற்கு... அண்ணா பல்கலை. VC-யின் நேர்காணல்!

author img

By

Published : Aug 3, 2023, 8:12 PM IST

அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கோர் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தால் அந்தத்துறையில் லீடராக இருப்பார்கள் என அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

பி.இ படிக்க நினைக்கும் மாணவர்களின் கனிவான கவனத்திற்கு... அண்ணா பல்கலை. VC-யின் அட்வைஸ்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2,19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 12,059 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1,76,744 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு என்று உள்ள சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 685 இடங்கள் நிறைவடைந்தது.

பொது மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட பொது கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் 16,516 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 10,716 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்தாண்டைப் போலவே நடப்பாண்டிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (COMPUTER SCIENCE AND ENGINEERING) பாடப்பிரிவினை 4,712 பேரும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங் (ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING) பாடப்பிரிவினை 2,848 பேரும்,

தகவல் தொழில்நுட்பம் (INFORMATION TECHNOLOGY ) பாடப்பிரிவினை 1,883 பேரும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (Artificial Intelligence and Data Science) பாடப்பிரிவினை 1,799 பேரும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING) பாடப்பிரிவினை 1206 பேரும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 808 பேரும்,

தகவல் தொழில்நுட்பம் (INFORMATION TECHNOLOGY SS) பாடப்பிரிவினை 435 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (COMPUTER SCIENCE AND ENGINEERING SS) பாடப்பிரிவினை 361 பேரும், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்பு ( COMPUTER SCIENCE AND BUSINESS SYSTEM) பாடப்பிரிவினை 351 பேரும், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் (AI மற்றும் இயந்திர கற்றல்) COMPUTER SCIENCE AND ENGINEERING (AI AND MACHINE LEARNING) பாடப்பிரிவினை 271 பேரும் தேர்வு செய்துள்ளனர்.

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் 151 பேரும், கெமிக்கல் இன்ஜினியரிங் 152 பேரும், பயோ டெக்னாலாஜி 143 பேரும், தமிழ் வழியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பாடப்பிரிவினை ஒரு மாணவரும் தேர்வு செய்துள்ளனர். 93 பாடப்பிரிவுகள் உள்ள நிலையில் கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவுகளை மட்டுமே மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 442 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான முதல் சுற்றுக் கலந்தாய்வு முடியும் தருவாயில் உள்ளது.

முதல் சுற்றுக் கலந்தாய்வில் 20,127 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 16,500 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 10,716 மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடப்பிரிவுகளை மட்டும் தேர்வு செய்துள்ளனர்.

எலட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவினை 3 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள 3 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே மீதமுள்ள பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். முக்கியமான மெக்கானிக்கல், சிவில் போன்றப் பாடப்பிரிவினையும் 600, 700 மாணவர்கள் தான் முதல் சுற்றில் சேர்ந்துள்ளனர்.

தற்பொழுதைய நிலையில் பாடப்பிரிவினை மாணவர்கள் தேர்வு செய்யும் முறை சற்று தவறாக உள்ளது போல் தெரிகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு நல்லக் கல்லூரியில் கிடைத்தால் சேர்வது நல்லது தான். ஆனால் மதிப்பெண்கள் அதிகம் பெற்ற மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவினை தேர்வு செய்வதற்குப் பதிலாக சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது நல்லது.

அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் எல்லா பிரிவுகளில் படிக்கும் மாணவர்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தினை படிப்பதற்கு வழிசெய்துள்ளோம். மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமாெபைல், ஏரோபோஸ் உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் படிப்பவர்களும், மைனர் டிகிரி எடுக்க முடியும்.

அதில் அவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை தேர்வு செய்து படித்துக்கொள்ள முடியும். இது போன்று தேர்வு செய்து படிக்கும் போது தனியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களை விட நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, மாணவர்கள் நல்லக் கல்லூரியை தேர்வுச் செய்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இனி வரும் காலத்தில் எந்தத்துறையை தேர்வு செய்து படித்தாலும் கம்ப்யூட்டர் அறிவுத் தேவை. எனவே, மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவினை பெறும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி விட்டோம். முக்கிய பொறியியல் பாடப்பிரிவினை எடுத்து படிப்பவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதனால் அதனை எடுத்து படிப்பது நல்லது.

மாணவர்களுக்கு முக்கிய பொறியியல் பிரிவுடன், கம்ப்யூட்டர் அறிவும் இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் படிப்பவர்கள் அவர்களின் துறையில் மட்டும் பணியாற்ற முடியும். வரும் தொழில் மாற்றம் 5.0-வில் பொறியியல் துறையின் அறிவுடன் கம்ப்யூட்டர் அறிவும் இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் நல்ல கல்லூரியில் கோர் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வுசெய்து விட்டு, மைனர் டிகிரி படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதியதாக படிக்கும் மாணவர்களுக்கும், ஏற்கனவே படிக்கும் மாணவர்களுக்கும் மைனர் டிகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் திறன்சார்ந்த பாடப்பிரிவுகளை 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமும் கொண்டு வருகிறோம்.

குறிப்பிட்ட சில பாடப்பிரிவினை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்யாமல் உள்ளனர். அதுபோன்ற பாடப்பிரிவுகளை அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வுசெய்தால், அந்தத்துறையில் லீடராக இருப்பார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் துறையில் வேலை வாய்ப்பு அதிகளவில் இருந்தால் மாணவர்கள் அதனைப் படித்தால் மட்டும் தான் வேலை கிடைக்கும் என நினைக்கின்றனர். கடந்த காலங்களில் சிவில், மெக்கானிக்கல் துறையில் கம்ப்யூட்டர் அறிவு அதிகளவில் இருக்காது.

அந்தத் துறையில் படித்து விட்டு, கம்ப்யூட்டர் அறிவு இல்லாவிட்டால் வேலைக்கு எடுப்பதில்லை. தற்பொழுது எல்லா பாடப்பிரிவிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் எந்த நேரத்திலும் கற்றுகொள்ள முடியும்.

கோர் இன்ஜினியரிங் பாடத்தினை வெளியில் சென்று கற்றுக்கொள்ள முடியாது. எனவே, கோர் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வுசெய்வது நல்லது. மேலும் ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டர் சார்ந்த சான்றிதழ் படிப்புகளையும் துவக்கிட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் A+ தரச் சான்று பெற்று சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.