ETV Bharat / state

‘கவுரவ விரிவுரையாளருக்கு ஊதியம் உயர்த்த வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

author img

By

Published : Jun 21, 2023, 8:19 PM IST

சென்னை பல்கலைக்கழகம் வழங்கியது போல், கவுரவ விரிவுரையாளருக்கு ஊதியம் உயர்த்த வேண்டும் எனவும் அத்துடன் பணிநிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவிரையாளர்களுக்கான ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது எனவும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் போதுமான நிரந்தர விரிவுரையாளர்கள் இல்லாததால், அவர்களுக்கு பதில் தற்காலிக விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் அமர்த்தியுள்ளனர். அதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் தொகுப்பூதியம் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி மாத ஊதியம், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு முழுமையாக மனநிறைவு அளிக்காது என்றாலும் கூட, வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.மேலும், இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10 ஆயிரம் என்ற மாத ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த கல்வியாண்டில் தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது.

அதுவும் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு பாடவேளைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக 50ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள போதிலும், அது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதில்ல என அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழக அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் போதிலும் கலை அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அந்த அளவு ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், வேளாண் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க கடந்த ஆண்டு உயர்கல்வித்துறை திட்டம் வகுத்த போதிலும், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள ஊதிய உயர்வு கூட அந்த பல்கலைக்கழகத்தின் துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் தான். தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 5583 கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு கிடைக்காது. தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது அமைப்பு சாரா பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகக் குறைவு ஆகும் எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதை உணர்ந்து சென்னை பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மாதம் 30 ஆயிரம் ரூபாய் என்ற ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். அத்துடன் பணிநிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையின் மூலம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி நல்லா இருக்கனும்" - மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.