ETV Bharat / state

கவனிப்பாரற்று இருள் சூழ்ந்து கிடக்கும் அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும்... ஓபிஎஸ்

author img

By

Published : Jun 27, 2023, 11:39 AM IST

அம்மா உணவகங்கள் நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, உழைக்கும் மக்களை, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர் வர்க்கத்தினரை காப்பதற்காக, மலிவு விலையில் தரமான உணவினை வழங்கும் வண்ணம் நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் அம்மா உணவகங்களை ஜெயலலிதா உருவாக்கினார்கள். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

அம்மா உணவகங்களின் செயல்பாட்டினை நீர்த்துப் போகச் செய்த பெருமை திமுகவையே சாரும். அம்மா உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தரமானதாகவும் சுவையானதாகவும் சுகாதாரமானதாகவும் இல்லை என்பதோடு, குறைந்த அளவு உணவே தயார் செய்யப்படுகிற நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக, உணவருந்த வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. பல இடங்களில் பல உணவுப் பொருட்கள் இல்லை என்ற நிலை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. உதாரணமாக, சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் குடிநீர்த் தொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து இருப்பதாகவும், உணவகத்திற்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

இதே போன்று, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்து பயனற்று இருப்பதாகவும், மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் இயங்காததன் காரணமாக இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடப்பதாகவும், நாய்களின் உறைவிடமாக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள அம்மா உணவகம் கழிவுநீர் மையமாக காட்சி அளிப்பதாகவும், மோட்டார் பழுதடைந்து இருப்பதாகவும், கஸ்தூரிபாய் மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திலும் இதே நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்தப் பகுதிகள் அனைத்துமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்டவை. இந்த நிலைமை தான் அனைத்து அம்மா உணவகங்களிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அம்மா உணவகங்கள் கேட்பாரற்று, கவனிப்பாரற்று அனாதையாக காட்சி அளிக்கின்றன. சென்னை மாநகராட்சியின் அறிக்கையில் அம்மா உணவகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகையில் செய்திகள் வந்தன.

ஆனால், தற்போதைய அம்மா உணவகங்களைப் பார்க்கும் போது, அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், 2021ஆம் ஆண்டிற்கு முன்பே இதுபோன்ற நிலைமை நிலவுவதாகவும், இதுகுறித்து அறிக்கை பெறப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுபோன்ற பதிலை அதிகாரிகள் தெரிவிப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஒரு திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்பது தெளிவாகிறது.

ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அவை நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை அம்பத்தூரில் தானியங்கி சோலார் சிக்னல் திறந்து வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.