ETV Bharat / state

"ஆளுநரை வெளியேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடணும்" - கே.பாலகிருஷ்ணன்!

author img

By

Published : Jan 12, 2023, 5:26 PM IST

ஆளுநராக செயல்படுவதற்கு தகுதி இல்லாதவராக ரவி இருக்கிறார் என்றும், ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

political
political

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் தனித்தனியே போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.

ஆளுநராக செயல்படுவதற்கு ரவி தகுதி இல்லாதவராக இருக்கிறார். அவர் அரசியல் சாசனங்கள் அனைத்தையும் மீறி செயல்படுகிறார். சட்டமன்றத்தில் ஏதோ எதிர்க்கட்சி போல கூட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, இடையில் வெளியே சென்றுள்ளார். நேற்று மத்திய அரசுக்கு மட்டுமே ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் மாநில அரசுக்கு எதிராக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தூண்டி விடுகிறார்.

புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவான சம்பவம். அரசு சார்பில் எடுத்த நடவடிக்கைகளை கட்சி சார்பில் பாராட்டுகிறோம். ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது வருத்தத்தையும் வேதனையினையும் அளிக்கிறது. முதலமைச்சர் சொல்லி இருப்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல், கைது நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் எங்கள் எய்ம்ஸ் எங்கே? என்ற கேள்வியை எழுப்பி மதுரையில் வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது, ஒரு செங்கல் கூட இன்னும் கட்டப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். மதுரையைச் சுற்றியுள்ள 10 மாவட்டங்களைத் திரட்டி, வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.

ஆளுநர் அரசின் உரையை முறையாகப் படித்துவிட்டு சென்றிருந்தால் இப்போது பிரச்னையே இல்லை. தமிழ்நாட்டு மக்களையும், சட்டமன்ற மாண்புகளையும் அவமானப்படுத்திய ஆளுநருக்கு வானதி சீனிவாசன் வக்காலத்து வாங்க வேண்டாம். ஆளுநர் வேண்டுமென்றே அரசை வம்புக்கு இழுப்பது போன்று செயல்படுகிறார்.

போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்க காரணமே அதிமுகவும், மோடியின் பாஜக அரசாங்கமும்தான். அம்பானி மன்றம், அதானி துறைமுகங்கள் வாயிலாகத்தான் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன.

ஈஷா யோகா மையம் சமூக விரோத கூடாரமாக மாறி வருகிறது, அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டு இருக்கின்றன. எனவே, தமிழ்நாடு அரசு ஈஷா யோகா மையத்திற்குச் சீல் வைக்க வேண்டும். அதிமுகவிற்கு குருவாக பாஜக செயல்படுகிறது. அவர்களை எதிர்க்கும் ஆளுமையை அதிமுக இழந்துவிட்டது.

வரும் 18ஆம் தேதி புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா சேகுவேரா மற்றும் சேகுவாராவின் பேத்தி எஸ்டெஃபானி குவேரா இருவரும் சென்னைக்கு வருகை தர உள்ளனர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 'சோசலிச கியூபாவிற்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவை தரும் சிறப்பு நிகழ்ச்சி' என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்ப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்' - அமைச்சர் சேகர் பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.