ETV Bharat / state

மேகதாது அணை விவகாரம்: அரசின் முடிவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு!

author img

By

Published : Jul 12, 2021, 5:46 PM IST

Updated : Jul 12, 2021, 10:25 PM IST

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம்
சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இதில்,13 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டி விபரம்:

ஜெயகுமார் - அதிமுக
ஜெயகுமார் - அதிமுக

ஜெயகுமார் - அதிமுக

"தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்க கூடாது என அதிமுக சார்பில் கூறியுள்ளோம். காவிரி உரிமைக்காக சட்ட ரீதியாக போராட்டம் நடத்திய இயக்கம் அதிமுக. காவிரி நதி நீரைப் பொறுத்தவரையில் கடந்த கால அதிமுக அரசின் தொடர்ச்சியாக, தற்போதைய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களைப் போல அரசியல் செய்ய போவதில்லை. தமிழ்நாட்டின் நலன், டெல்டா மக்களின் நலன் இது தான் எங்களுக்கு முக்கியம். நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு இணையானது. கர்நாடக அரசு அணை கட்டுவதாகக் கூறுவது சட்ட விரோதமான செயல்; அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கே.எஸ் அழகிரி - காங்கிரஸ்
கே.எஸ் அழகிரி - காங்கிரஸ்

கே.எஸ் அழகிரி - காங்கிரஸ்

"முதலமைச்சர் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறார். சட்டத்தின் மூலமான நடுவர் மன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். மேகேதாட்டுவில் அணை கட்டுவது சட்டத்துக்கு புறம்பானது. கர்நாடகாவுக்கு உள்ள உரிமை, தமிழ்நாட்டுக்கும் காவிரி மீது உள்ளது.

தமிழ்நாடு அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. கர்நாடக அரசு சட்டத்தை மீறினால், தமிழ்நாடு அரசு சட்டத்தின் மூலம் தீர்வு காண வேண்டும். கர்நாடக அரசை கடுமையாக எதிர்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் - பாஜக
நயினார் நாகேந்திரன் - பாஜக

நயினார் நாகேந்திரன் - பாஜக

"கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் சூழலில், தமிழ்நாடு அரசு எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் பாரதிய ஜனதா கட்சி முழு ஆதராவை அளிக்கும். தமிழ்நாடு மக்களின் நலன் மட்டுமே தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வின் நிலைப்பாடு" என்றார்

அரசின் முடிக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு

வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமை கட்சி

"சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. காவிரி நீர் பிரச்னைகளின் போது தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள். இதை தமிழ்நாடு அரசு இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கண்டிப்பாக மேகதாதுவில் அணைக்கட்ட விட கூடாது. இனவெறியர்களை ஒடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசின் முடிவை பாராட்டி வரவேற்றுள்ளோம். உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில், பெங்களூரு நகரின் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு தான் தீர்ப்பளித்து உள்ளது. மீண்டும் குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி தமிழ்நாட்டினை பாலைவனமாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கி உள்ளது. சட்டப்போராட்டம் நடத்தி, ஒன்றிய அரசை வலியுறுத்தி விரைவில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

முத்தரசன் - இந்திய கம்யூனிட் கட்சி

"கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு துணை போகிறது. முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதும், தீர்மானம் நிறைவேற்றியதும் வரவேற்கத்தக்கது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா சார்பாக இல்லாமல், ஒன்றிய அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும். இது நதிநீர் பிரச்னை மட்டுமல்ல, தேசத்தின் ஒருமைப்பாட்டு பிரச்னை. பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்கிற அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன் - விசிக

"அனைத்துக் கட்சி கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எதிர் கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை நல்கும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் இந்த முயற்சிக்கு துணை போக கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. முதலமைச்சரின் தலைமையில் அனைத்துக் கட்சி குழு, பிரதமரைச் சந்திக்க திட்டம். ஆளும் கட்சி எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் விசிக ஆதரவாக இருக்கும். மேகதாதுவில் அணைகட்டுவது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு எதிரானது. கட்டாயமாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புவோம். காவிரி ஆற்றின் நீர் உரிமைக்கு குரல் கொடுப்போம்" எனத் தெரிவித்தார்.

ஈஸ்வரன் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பதவி தடுமாற்றத்தில் இருப்பதால், அவர் மேகதாது பிரச்னையை அரசியலுக்காக பயன்படுத்துகிறார். மேகதாது அணை கட்ட வாய்ப்பில்லை என முதலமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் தைரியத்தை கர்நாடக அரசுக்கு யார் கொடுத்தது எனக் கூறினார்.

ஜி.கே மணி :- பா.ம.க

மேகதாதுவில் அணை கட்ட கூடாது. காவிரி பிரச்னையில் தமிழ்நாடு கடைமடை மாநிலம். கடைமடை மாநிலத்துக்கு தான் அதிக உரிமை என நதிநீர் சட்டங்கள் கூறுகின்றன. காவிரி விவகாரத்தில், இந்திய நாட்டின் இரு சகோதர மாநிலங்களின் பிரச்னை, 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்பை கர்நாடக அரசு ஏற்று நடக்க வேண்டும். உரிய நேரத்தில் முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளார். மேகதாட்டு பிரச்னைக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு அளித்த திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் பொறுப்பு தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. அனைத்து கட்சி குழு டெல்லி சென்று பிரதமரை சந்திப்போம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது வரவேற்க தக்கது. அதே போல் வரும் சட்டப்பேரவைக் கூட்ட தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

பேரா. ஜவாஹிருல்லா - மனித நேய மக்கள் கட்சி

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாக உள்ளது. காவிரியிலிருந்து வெள்ள பெருக்கினால் ஏற்படும் உபரி நீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால், இந்த உபரி நீரும் தமிழ்நாட்டுக்கு வராது. தொடர்ந்து இதற்காக போராடுவோம் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக போராடுவோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மேகேதாட்டுவில் அணைகட்ட விடமாட்டோம்' - ஸ்டாலின் உறுதி

Last Updated : Jul 12, 2021, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.