ETV Bharat / state

சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு: காரணம் என்ன?

author img

By

Published : May 5, 2023, 6:36 PM IST

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Flight charge
விமான கட்டணம்

சென்னை: நாட்டில் சர்வதேச விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்குத் தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் ஏற்ப மாறுபடும்.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானப் பயணியிடம் ரூ. 205, சர்வதேச விமானப் பயணியிடம் ரூ.300-ம், விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டணத்தை மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானப் பயணிக்கு, விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் ரூ.295ஆகவும், சர்வதேச விமானப் பயணிக்கு ரூ.450ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டணம் விமான டிக்கெட்டுடன் இணைத்து வசூலிக்கப்படும். இதன்படி உள்நாட்டு விமானப் பயணிக்கு ரூ. 90ம்; சர்வதேச விமானப் பயணிக்கு ரூ.150ம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர், அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளிடம் வசூலித்த கட்டணத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும்.

இக்கட்டண உயர்வு சென்னை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அமல்படுத்தப்படுகிறது. எனினும், அந்தந்த விமான நிலையங்களில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். எனினும், இந்தக் கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுவதால் பயணிகள் பலருக்கு கட்டண உயர்வு பற்றி தெரியாது. இது மறைமுக கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விமானப் பயணிகளிடம் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணைய விதிமுறைகளில் உள்ளது.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம் - ஐபிஎஸ்ஸை கீழ்நிலை அதிகாரி விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்?:வழக்கறிஞர் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.