ETV Bharat / state

சென்னை - அந்தமான் இடையே விமானசேவை முற்றிலும் நிறுத்தம் - காரணம் என்ன?

author img

By

Published : Nov 2, 2022, 6:22 PM IST

அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும் அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்புப்பணிகள் நடப்பதாலும் சென்னை முதல் அந்தமான் விமானப்போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை-அந்தமான் இடையே விமான சேவை நிறுத்தம்!!!
சென்னை-அந்தமான் இடையே விமான சேவை நிறுத்தம்!!!

சென்னை: விமான நிலையத்திலிருந்து அந்தமானுக்கு தினமும் 5 முதல் 7 ஏழு விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தலமாக இருப்பதால் பயணிகள் பெருமளவு அந்தமானுக்குச்சென்று வந்தனர். மேலும் அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவைச்சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் பயணிகள் கூட்டம் எப்போதுமே நிறைந்து, வழிந்து கொண்டு இருக்கும்.

ஆனால், அந்தமானில் பகல் 3 மணியிலிருந்து தரைக்காற்று வீசத்தொடங்கிவிடும். அப்போது அங்கு விமானங்கள் தரையிறங்க, புறப்படமுடியாது. இதனால் அந்தமான் விமானநிலையத்தில் அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும் அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்புப்பணிகள் நடப்பதாலும் சென்னை - அந்தமான் விமானப்போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் சென்று வரும் ஏா் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஃகோ ஏா்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சென்னையிலிருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் 7 விமான சேவைகளும் வரும் 4ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் 5ஆம் தேதியிலிருந்து அந்தமானுக்கு சென்னையிலிருந்து விமான சேவைகள் தொடங்குகின்றன.

அந்தமானுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்குத்தகவல் கொடுத்து அவர்கள் டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல், அல்லது முழு பணமும் திரும்பக்கொடுத்தல் போன்ற முறைகளை விமான நிறுவனங்கள் ஏற்பாடு செய்தனர். இதனால், பயணிகளுக்கும் விமான நிறுவனத்துக்கும் இடையே எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

ஆனாலும், அந்தமான் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்தமானுக்கு அவசர வேலையாக செல்ல வேண்டியவா்கள், அங்கிருந்து வரவேண்டியவா்கள், மருத்துவ பொருட்கள் போன்றவை எடுத்துச்செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர்களிடம் கேட்டபோது, 'அந்தமானில் தற்போது மோசமான வானிலை நிலவிக்கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் விமான நிறுவனத்துக்கு அதிகமான நஷ்டங்கள் ஏற்படுவதோடு பயணிகளுக்கும் விமான நிறுவனங்களுக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் சென்னை - அந்தமான் இடையே போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

சென்னை - அந்தமான் இடையே விமானசேவை முற்றிலும் நிறுத்தம் - காரணம் என்ன?

இதையும் படிங்க:ஆவடி காவல் நிலையத்திற்குள் மழை நீர் - அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.