ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி.. ஜி.கே.வாசன் அறிவிப்பு..

author img

By

Published : Jan 20, 2023, 8:03 AM IST

Updated : Jan 20, 2023, 8:42 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இத்தொகுதியில் தமாகா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம். தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.

எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 19.01.2023 வியாழக்கிழமை அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள். அப்போது இந்த இடைத்தேர்தலில் அஇஅதிமுகவின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள்.

அதன் அடிப்படையில் தமாகாவின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அஇஅதிமுக வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது.

தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும்.

கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை தமாகா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கட்சியிடம் தமிழ் மாநில காங்கிரஸ் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸிற்கே - மதச்சார்பற்ற கூட்டணி அறிவிப்பு

Last Updated :Jan 20, 2023, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.