ETV Bharat / state

அதிமுகவின் விருப்ப மனு அறிவிப்பு: கூட்டணி கட்சிகள் பதைபதைப்பு!

author img

By

Published : Feb 15, 2021, 10:56 PM IST

தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அதிமுக தலைமை அறிவித்திருப்பது கூட்டணி கட்சிகளிடம் பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

admk announced petition recived
அதிமுகவின் விருப்ப மனு அறிவிப்பு: கூட்டணி கட்சிகள் பதைபதைப்பு!

சென்னை: அதிமுக சார்பில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் கட்சியின் தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தேதியான பிப்., 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மார்ச் 5ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விருப்ப மனு படிவங்களைப் பெற்று கொள்ளலாம் என்று, இன்று அறிவிக்கப்பட்டது. இது அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக, தமாகா, பாஜக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் , தமிழ்நாட்டின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக தங்களின் தேர்தல் பரப்புரையைத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் துரிதப்படுத்தி விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுகளை இன்னும் முறையாக இறுதி செய்யாத நிலையில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளது.

admk announced petition recived
எடப்பாடி கே பழனிசாமி

அதிமுக-பாமக தொகுதி பங்கீட்டிற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் விருப்ப மனு தேதியை அதிமுக அறிவித்துள்ளது. எனவே, அதிமுகவின் இந்த திடீர் அறிவிப்பு, பாமகவுக்கும் ஒரு வியப்பை கொடுத்திருக்கிறது.

மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக, அதிமுகதான் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்து காத்து இருக்கிறார். பிரதமர் நேற்று சென்னை வந்து சென்ற நிலையில் விருப்ப மனு பெறும் அறிவித்து, அதிமுக தேர்தல் பணிகளை வேகப்படுத்தி உள்ளது.

admk announced petition recived
அதிமுகவின் விருப்ப மனு அறிவிப்பு: கூட்டணி கட்சிகள் பதைபதைப்பு

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் இது குறித்து நம்மிடம் பேசுகையில், "அதிமுகவின் இந்த நிலைப்பாடு தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல. அதிமுக அதன் கூட்டணி கட்சிகளைத் தவிர்க்கிறது என்று சொல்லவில்லை. வெகு விரைவில் பாஜக தொகுதி பங்கீட்டிற்கான பேச்சு வார்த்தையை அதிமுகவுடன் தொடங்கும்" என்றார்.

இதேபோல, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி கூறுகையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள், பிப்ரவரி 24 தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஜெயலலிதா நினைவிட இறுதிகட்டப் பணிகள் முடிந்து அருங்காட்சியகம் அன்றே திறக்கப்படுகிறது. அதிமுகவின் கூட்டணிகள் தொடரும். இந்த அறிவிப்புக்கும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கும் சம்மந்தம் ஏதுமில்லை. இது அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல" என்றார்.

அரசியல் வட்டாரங்களில், அதிமுக பாமகவுக்கு 25 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரசுக்கு 7 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 முதல் 12 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக பேசப்படுகிறது.

admk announced petition recived
எடப்பாடி கே பழனிசாமி

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "இந்த நடைமுறை புதிதல்ல. இது கட்சியின் பலம் 234 தொகுதிகளில் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த யுக்தியைப் பயன்படுத்துகின்றனர். அதிமுகவின் கூட்டணி கட்சிகள் கடந்த தேர்தல்களில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. எனவே, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் தேர்தலிலும் இந்த யுக்தியை பயன்படுத்தி, தன்னை ஜெயலலிதா போல் பெரிய தலைவராக காட்டிக்கொள்ள முயற்சிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

ஜெ போன்ற ஆளுமை மிக்க தலைவராக காட்டி கொள்ளவும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கை குறைத்து காட்டவும் இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளார். இது கை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பிப்.17 முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் - திமுக அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.