ETV Bharat / state

நடிகர் ஜூனியர் பாலையா மறைவு! சாட்டை உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 11:52 AM IST

Actor junior balaiah passed away : கரகாட்டக்காரன், சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலமானார்.

actor junior balaiah passed away
நடிகர் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்

சென்னை: கரகாட்டக்காரன், சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜூனியர் பாலையா. 70 வயதாகும் இவர் இன்று (நவ. 2) காலை மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு. இவருடைய அப்பா டி.எஸ்.பாலையா, எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் மிகப் பெரிய நடிகராக வலம் வந்தவர்.

ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சொல்லும் பேய்க் கதையைக் கேட்கும் போது டி.எஸ்.பாலையா மிகச் சிறப்பாக நடித்திருப்பார். ரகுவாக திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தவர் ஜூனியர் பாலையா. சிவகுமார், கமல் நடித்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய 'மேல்நாட்டு மருமகள்' படத்தில் இருந்து நடிக்கத் தொடங்கினார் ஜூனியர் பாலையா.

கே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் உருவான 'தியாகம்' படத்தில் சிவாஜியுடன் பல காட்சிகளில் நடித்தார். 'வாழ்வே மாயம்' படத்தில் கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். சின்ன சின்ன கதாபாத்திரங்கள் தான் என்றாலும் அதில் தன் நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்திய ஜூனியர் பாலையாவுக்கு இயக்குநர் பிரியதர்ஷனின் 'கோபுர வாசலிலே' திரைப்படம் அருமையான இன்னொரு கதவைத் திறந்தது.

இந்த படத்தில் கார்த்திக், ஜனகராஜ், நாசர், சார்லியுடன் சக நண்பர்களில் ஒருவராக ஜூனியர் பாலையா நடித்து அசத்தியதோடு 'ஒரு தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது' பாடலுக்கும் நட்பு சூழ வந்து ரசிகர்கள் மனதில் நின்றார். கங்கை அமரன் இயக்கத்தில் எவர்கிரீன் ஹிட்டடித்த 'கரகாட்டக்காரன்' படத்தில், ராமராஜனின் கரகாட்டக் கோஷ்டியில் ஜுனியர் பாலையாவின் நடிப்பு தனித்துத் தெரிந்தது.

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், தனது 'சுந்தரகாண்டம்' படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தை ஜுனியர் பாலையாவிற்கு கொடுத்தார். எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய கதாபாத்திரமாக அது அமைந்தது. பிறகு பாக்யராஜ் தொடர்ந்து தனது படங்களில் ஜூனியர் பாலையாவைப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில் அம்மா வந்தாச்சு, ராசுக்குட்டி, வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தன. கொடுத்த கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் ஜூனியர் பாலையா. மேலும் சாட்டை படத்தில் தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில், தற்போதைய காலகட்ட சினிமா ரசிகர்களையும் ரசிக்கும்படியான தனது சிறப்பான நடிப்பை வழங்கி ஜூனியர் பாலையா, இன்று காலமாகி விட்டார் என்ற செய்தி தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரது மறைவுக்குத் திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "தங்கலான் என்பதே ஒரு அரசியல் தான்" - இயக்குநர் பா.ரஞ்சித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.