ETV Bharat / state

சந்தனக் கட்டைகள் பறிமுதல் - மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மீது நடவடிக்கை?

author img

By

Published : Sep 25, 2021, 3:49 PM IST

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.பி.வெங்கடாசலம் வீட்டில் 15.25 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தன கட்டைகள் பறிமுதல்
சந்தன கட்டைகள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஏ.பி.வெங்கடாசலம் பதவி வகித்து வருகிறார். வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். பின்னர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

அவருடைய பணிக்காலம் முடிவடையும் நாளான செப்டம்பர் 23ஆம் தேதி அவரது வீடு உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தடையில்லா சான்று வழங்கிய முறைகேட்டில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வெங்கடாச்சலம் வீட்டில் 15.25 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையானது.

சந்தனக் கட்டைகள் பறிமுதல்

குறிப்பாக தனி நபர் உரிமம் பெற்று 15 கிலோ வரை சந்தனக் கட்டைகள் வைத்திருக்க சட்டம் உள்ளது. ஆனால் வெங்கடாசலம் 15.25 கிலோ சந்தனக் கட்டைகள் வைத்திருந்ததால், பறிமுதல் செய்யப்பட்ட கட்டைகள் சென்னை வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, வனத்துறை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சொத்து ஆவணங்கள் கணக்கிடும் பணி

அதேபோல் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கணக்கிடும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஜிபி உத்தரவு எதிரொலி: மதுரையில் ரவுடிகள் மீது தொடரும் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.