ETV Bharat / state

தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம் பற்றிய பாடம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:05 PM IST

Sanatan Dharma in 12th std TN Text book: சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு புத்தகத்தில் ‘சனாதன தருமம் அழிவில்லாத நிலையான அறம்’ என குறிப்பிடப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

12th class book has explanation of sanatana dharma raises controversy on udhayanidhi stalin
12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம்

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறினார்.

மேலும், “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சமத்துவத்துக்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சனாதனத்தை ‘அழிவில்லாத நிலையான அறம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற புத்தகத்தில், இந்தியப் பண்பாடும் சமயங்களும் என்ற பாடத்தில், இந்து சமயம் என்ற தலைப்பில், இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சனாதன தருமம் என்றால் அழிவில்லாத, நிலையான அறம் எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், வேத சமயம் என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டிருப்பதால், வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்து சமயத்தின் அடிப்படை: மேலும், “இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கடவுளை அடைவதாகும். எல்லாவற்றையும் விட இவர் மேலானவராக இருப்பதால், கடவுளைப் பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறார். படைக்கும்போது அவர் பிரம்மன் என்றும், காக்கும்போது விஷ்ணு என்றும், அழிக்கும்போது சிவன் என்றும் அறியப்படுகிறார்.

இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துகள் ஆகும். அதேபோல, இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனிமனிதக் கடமைகள் (ஆசிரம தர்மம்), சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது.

இந்து சமயம், ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்திருக்கும் சமூகத்துக்கெனச் சில கடமைகளை ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்துக்கான தொழில் கடமைகளேயாகும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதே போன்று, இந்து சமயம் முறையே சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என ஆறு பிரிவுகளை உள்ளடக்கியது எனவும் விளக்கப்பட்டுள்ளது. “செளரம் என்பது சூரியனை முழு முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுகிற சமயமாகும். இதனைப் பின்பற்றுவோர் செளரர் என அழைக்கப்படுவர். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டத் தேரில் அமர்ந்திருப்பார். சூரியனுக்கு நன்றி கூறும் விதமாகவே நாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சனாதனத்துக்கு எதிராக திமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், திமுக கட்சியைச் சேர்ந்தவர்களும் பேசி வரும் நிலையில், சனாதனத்தை ‘அறம்’ என்று தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது அரசின் இரட்டை நிலைப்பாடு எனப் புதிய சர்ச்சையை கல்வியாளர்கள் கிளப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: "திமுக ஒரு டெங்கு; ஒழித்தால் நன்றாக இருக்கும்" - சி.வி.சண்முகம் விளாசல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.