ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு நிறுவனமே பணத்தை சரியாக தந்துவிடும்.. வாடிக்கையாளர்கள் விரக்தி!

author img

By

Published : Jul 12, 2022, 9:19 PM IST

ஆருத்ரா கோல்டு நிறுவனமே தங்களுக்கு பணத்தை சரியாக தந்துவிடும் என வாடிக்கையாளர்கள் கூறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவனமே பணத்தை சரியாக தந்துவிடும்.. வாடிக்கையாளர்கள் விரக்தி!
ஆருத்ரா கோல்டு நிறுவனமே பணத்தை சரியாக தந்துவிடும்.. வாடிக்கையாளர்கள் விரக்தி!

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 30,000 வட்டி வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி, ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பாக, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்தின் நிர்வாகி இருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகருக்கு, வருவாய்த்துறை மூலம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமின் வழங்கப்பட்டது.

மேலும் சுமார் 1,600 கோடி ரூபாய் பொதுமக்களால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பணத்தை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள் என்ற விவரங்களை மனுவாக கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி முதலீட்டாளர்கள், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு முதலீட்டாளர்களில் 1,500 பேருக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், சுமார் 30 வருவாய் துறை அலுவலர்கள் ஆர்டிஓ தலைமையில் ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்து, புகார்தாரர்களிடம் மனுவைப் பெற்று பதிவு செய்து டோக்கன் வழங்கி வருகின்றனர்.

அதேநேரம், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2,500 க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் திரண்டு வந்ததால் வருவாய் துறை அலுவலர்களாலும், காவல்துறை அலுவலர்களாலும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து காலையில் இருந்தே தங்களுக்கு டோக்கன் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக, அதில் ஒரு பகுதியினர் ராஜரத்தினம் மைதானம் எதிரே உள்ள டாக்டர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து, “30 பேர் கொண்ட வருவாய் துறை அலுவலர்கள் பதிவு செய்த டோக்கன் வழங்கி வருகிறார்கள். பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் காத்திருந்து டோக்கன் பெற்று கொண்டுச் செல்ல வேண்டும்” என அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் வருகிற 5 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனமே பணத்தை சரியாக தந்துவிடும்.. வாடிக்கையாளர்கள் விரக்தி!

ஆனால் ஆருத்ரா விவகாரத்தில் காவல்துறையும், நீதிமன்றமும் ஏன் தலையிடுகிறது? அந்த நிறுவனமே தங்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுத்து விடும் என கூறிய நபர்களால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளியிட்ட அந்த ஆடியோ பதிவில், “நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினருடன் சேர்ந்து உரியவர்கள் அனைவருக்கும் பணத்தை 100% திருப்பி தருவோம். மேலும், பொருளாதார குற்றத் தடுப்பு காவல்துறையினர் சோதனையின் பொழுது பல்வேறு இடங்களில் பெரும் தொகை கைப்பற்றப்பட்டது. ஆனால் அந்த பணம் கணக்கில் காட்டப்படவில்லை” எனப் பேசியுள்ளார்.

இதற்கிடையில் ஆருத்ரா வழக்கை கையாண்டு வந்த அலுவலர்கள் மீது முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து, நான்கு அலுவலர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெற்றி கொடிகட்டு பட பாணியில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.