ETV Bharat / state

'நடுவானில் நெஞ்சு வலியால் துடித்த பயணி' - சமயோஜிதமாக பைலட் செய்த வேலை!

author img

By

Published : Dec 18, 2022, 5:09 PM IST

விமானத்தில் சென்ற பெண் விமானப் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சவுதி அரேபியாவிலிருந்து மலேசிய நாட்டுக்குச் சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பெண் விமானப் பயணி ஒருவர் திடீரென நெஞ்சு வலியால் துடிக்கவே அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூருக்கு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் (Saudi Arabian Airlines) என்ற பயணிகள் விமானம் 378 பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி(58) என்ற பெண் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருடன் அதே விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஜமீலா பிந்திக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் துடித்தார்.

இதையடுத்து அவருடன் வந்த குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் விமான பணிப்பெண்களிடம் அவசரமாக தெரிவித்த நிலையில், உடனே ஜமீலா பிந்திக்கு விமானத்திற்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படவே, விமானி உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார்.

இந்நிலையில், அந்த விமானம் அந்நேரத்தில் சென்னை வான்வெளியைக் கடந்து சென்று கொண்டிருந்து. உடனே, விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் டெல்லி தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டனர். அங்கிருந்து உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு அந்தப் பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.

இதை அடுத்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த இரண்டு பயணிகள் ஆகியோருக்கு அவசரகால மருத்துவ விசாக்கள் வழங்கினர்.

அதன் பின், மூன்று பேரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மற்ற 375 பயணிகளுடன் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (டிச.18) அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: Viral Video: மணல் கொள்ளையை தடுக்க சுவரொட்டி: இளைஞருக்கு அடி உதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.