ETV Bharat / state

அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனை.. ஏமாறும் சிறு வியாபாரிகள்.. சிறப்புத் தொகுப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 9:33 PM IST

Updated : Nov 10, 2023, 9:47 PM IST

Diwali online fireCracker sal: தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைனில் வாங்கி வருவதால் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் தரப்பு விளக்கத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனையால் சிறு வியாபரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனையால் சிறு வியாபரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், தீபாவளிக்கான பட்டாசுகளை பெரும்பாலான பொதுமக்கள் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். இதனால் சிறு வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சிறு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆன்லைனில் பட்டாசுகள் வாங்குவதால் தங்களுக்கு லாபம் கிடைப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக தீபாவளி நெருங்கும் சமயத்தில், ஒவ்வொரு கடைவீதிகளிலும் வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், சிறு வியாபாரிகள் பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது, சென்னை தீவுத்திடலில் மட்டும் பட்டாசு விற்பனையானது நடந்து வருகிறது.

தற்போது, நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்குக் கூட, சிலர் ஆன்லைனில் தான் புத்தாடைகள் வாங்குகின்றனர். மேலும் உணவு, புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்ட சிறு சிறு பொருட்களைக் கூட பெரும்பாலான மக்கள் ஆன்லைனின் வாங்கத் தொடங்கிவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தீபாவளிக்கான பட்டாசுகளைக் கூட தற்போது மக்கள் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். இப்படி ஆன்லைனின் வாங்குவதால், தீபாவளியை நம்பி கடன் வாங்கி பட்டாசு கடைகளை அமைக்கும் சிறு வியாபர்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கபட்டு உள்ளது.

இது குறித்து ஆவடியில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரியான சுந்தரேசன் கூறுகையில், “ஒவ்வொறு ஆண்டும் பட்டாசு விற்பனை நல்ல விமர்சையாக நடைபெறும். எங்கு கடைபோட்டாலும், தீபாவளி தினம் வரை எங்களுக்கு வியாபரம் இருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பட்டாசு கடைகளுக்கான ஷெட் மற்றும் தற்காலிக கடைகளை அமைப்பதில், பல கெடுபிடிகள் வந்துள்ளன.

இதனால், சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எப்போதும் பட்டாசு விற்பனை என்பது தீபாவளியின் கடைசி 3-4 நாட்கள் மட்டும் தான். ஆனால் இம்முறை பட்டாசு விற்பனை என்பது எதிர்பார்த்த அளவில்லை என்பது தான் உண்மை. இதற்கு காரணம், இரண்டு மாதம் முன்பே சிவகாசியில் உள்ள பல பட்டாசு கடை உரிமையாளர்கள், சமூக ஊடகங்கள் மூலமாகவும், யூடியூபர்ஸ் மூலமாகவும், டிஜிட்டல் விற்பனைகளில் இறங்கி விட்டதே ஆகும்.

ஆனால் நாங்களோ, இன்னும் துண்டு பிரசுரங்களை நம்பி தான் இருக்கிறோம். நாங்கள் சிவகாசியில் இருந்தும், பல்வேறு நிறுவனங்களில் இருந்தும், வகை வகையாக பட்டாசுகளை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளோம். ஆனால், பட்டாசு விற்பனையானது சிறு வியாபாரிகளிடைய கம்மி தான்.

மேலும், இம்முறை தீவுத்திடலில் 55 கடைகளுக்கு மட்டும் தான் உரிமை வழங்கப்பட்டுள்ளது. சென்ற முறை 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இப்போது தீவுத்திடலில் கடை வைத்திருப்பவர்கள் எல்லாம், வியாபர சங்க நிர்வாகிகள் தான். எங்களுக்கு என்று தனியாக சங்கம் எதுவும் இல்லை. நாங்கள் அந்தந்த இடத்தில் இருக்கும் மக்களை நம்பி தான் கடையை நடந்துகிறோம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சிவகாசியில் உள்ள பட்டாசு நேரடி விற்பனையாளர் தீபா ராணி கூறுகையில், “நாங்கள் ஆன்லைனில் விற்பனை செய்வதால், எங்களுக்கு லாபம் சிறு அளவு தான். மேலும், இவ்வளவு நாட்கள் எங்களின் பொருட்களை சந்தைப்படுத்த தெரியாமல் இருந்தோம். தற்போது இந்த உக்தியை நாங்கள் கையாளுவது எங்களுக்கு லாபம்.

எங்களுக்கு இது தான் தொழில். வருடத்தில் 364 நாட்கள் உழைப்பில் கழிய, 365-வது நாள் தான் எங்களுக்கு தீபாவளி. தீபாவளி முடிந்த கையுடன் நாங்கள் மறுபடியும் இந்த தொழிலுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலம் நாங்கள், முறையாக உரிமம் பெற்ற லாரிகளில், முழு பாதுகாப்புடன் பட்டாசுகளை அனுப்புகிறோம். மேலும், மொத்தமாக ஆர்டர்கள் வருவதால், தள்ளுபடி போக லாபமும் இருக்கிறது.

இதுபோல பல பட்டாசு நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள், ஏஜென்டுகள் என அனைவரும் இப்படி செய்கின்றனர். மேலும் தற்போது மக்களும் நேராக வர ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருச்சியில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அதுமட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில வாடிக்கையாளர்களும், பட்டாசு வாங்குவதற்காக குடும்பத்துடன் சிவகாசிக்கு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆன்லைனின் பட்டாசு வாங்கியவர்களை கேட்டபோது, “நாங்கள் ஆன்லைனின் வாங்க காரணம், இங்கு இருக்கும் கடைகளை ஒப்பிடுகையில் ஆன்லைனின் விலை என்பது குறைவு. மேலும், இங்கு இருக்கும் கடைகள் விலைப்பட்டியல் என்பது, ஒன்று வாங்கிய பிறகு தள்ளுபடி. அதற்கு பிறகு பேரம் பேசினால் அப்போது ஒரு விலை. ஆனால் எது சரியான விலை என்பது தெரியவில்லை.

ஆனால் ஆன்லைனிலோ ஒரே விலை. மேலும், ஆன்லைன் அல்லது வாட்ஸ்அப் மூலமாக பட்டாசுகளை ஆட்டர் செய்யும் போது, விடியோக்கள் மூலம் பட்டாசுகளின் தரத்தை பதிவு செய்கிறார்கள். கடைகளில் வாங்குவதை விட, இங்கு எங்களுக்கு இரு மடங்கு அதிகமாக பட்டாசுகள் கிடைக்கின்றன. மேலும், உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து வகை பட்டாசுகளையும் நம்மால் வாங்க முடிகிறது. ஆன்லைன் மூலம் வாங்கினால் எங்களுக்கு லாபம் இருக்கிறது. பட்டாசுகளின் அளவும் அதிகமாக கிடைக்கிறது” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கண்மாயில் சென்ற நுரை.. தண்ணீர் ஊற்றி அகற்றிய தூய்மைப் பணியாளர்கள்!

Last Updated : Nov 10, 2023, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.