ETV Bharat / state

ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா: சென்னையில் எதிர்க்கட்சிகளின் சங்கமம்!

author img

By

Published : Feb 22, 2023, 7:12 AM IST

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளில் எதிர்க்கட்சிகளின் சங்கமம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டத்தின் முன்னோட்டமாக கருதப்படவுள்ளது.

ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா
ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை வருகின்ற மார்ச் 1ஆம் தேதி கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1 மாலை 5.00 மணிக்கு சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத் தக்க வகையில், அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகிய அனைவரும் வருகை தர உள்ளனர்.

இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை ஏற்கிறார். திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார். மேலும் இவ்விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்புரை ஆற்ற இருக்கிறார். சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்ற உள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் முதல்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை: கடந்த 24 ஆண்டுகளாக காந்தி - நேரு குடும்பத்தின் வசம் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி, தற்போது காந்தி - நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாக அறியப்படும் மல்லிகார்ஜுன கார்கே வசம் வந்து சேர்ந்திருக்கிறது. இவர் நாடாளுமன்றத்தில் கடுமையாக மத்திய அரசை விமர்சித்தும், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை கடுமையாக வைத்து வருகிறார். இந்நிலையில் மதச்சார்பற்றகூட்டணியின் தலைவராக கருதப்படும் இவர் முதல்முறையாக சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க உள்ளார்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை: வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையினை மேற்கொண்டார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தியின் யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைத்தார். மேலும் டெல்லி பேரணியில் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பாஜக தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது. மேலும் அக்கட்சி தேர்தல் பணிகளை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜகவை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.

மேலும் பாஜகவின் பத்தாண்டு கால மோசமான மற்றும் மக்கள் விரோத ஆட்சியைப்போக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் நினைத்து வரும் சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள்வதால், பாஜகவின் வார்த்தை ஜாலங்கள் மக்கள் மத்தியில் வெளி கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதச்சார்பற்ற மெகா கூட்டணி: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. மேலும் பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்துவரும் நிலையில், மதச்சார்பற்ற மாபெரும் மெகா கூட்டணி 2024 தேர்தலுக்கு முன்னரே உருவாக அநேக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் காங்கிரஸ், திமுக மற்றும் அகில இந்திய அளவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்பதால், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்து பொது மேடையில் காரசாரமாக கருத்துகள் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: வேலை வேண்டுமா..? முகாமுக்கு வாங்க - அரியலூர் ஆட்சியர் அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.