ETV Bharat / state

ஆன்லைன் கோல்டு டிரேடிங் மோசடி: ஐடி ஊழியரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்!

author img

By

Published : Mar 22, 2023, 8:06 AM IST

வாட்ஸ் அப் மூலமாக, meeri gold செயலியை பதிவிறக்கம் செய்து ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி, ஐடி ஊழியரிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வானகரத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் ரகுராம், அண்ணா நகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு எம்பிஎல் கோல்டு என்ற நிறுவனம் தொடர்பாக குறுஞ்செய்தி வந்ததாகவும், தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து, பணம் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். ஆன்லைனில் கோல்ட் டிரேடிங் மூலமாக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி நம்ப வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் செயலியின் லிங்கை வைத்து செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். meeri gold என்ற பெயரில் வரும் செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், நிறுவனமே 5 லட்ச ரூபாய் முதற்கட்டமாக முதலீடு செய்து ஆன்லைன் கோல்டு டிரேடிங் செய்ய உதவும். அவ்வாறு ஆன்லைனில் கோல்ட் டிரேடிங் செய்ய தனது பெயர், வங்கி கணக்கு, ஆவணங்களை பயன்படுத்தி முதற்கட்டமாக லாபம் பார்க்கலாம் என்பன உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை காட்டி நம்ப வைத்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

வாட்ஸ் அப்பில் இவர்கள் வெளிநாட்டு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதால், இது உண்மையா? என்பதை சோதனை செய்ய வேறொரு மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணம் முதலீடு செய்து பார்த்ததாகவும், ஐடி ஊழியர் ரகுராம் தெரிவித்துள்ளார். அவ்வாறு முதலீடு செய்வதில் 3000 ரூபாய் பணம் வங்கிக் கணக்கில் கிடைத்ததாகவும், இதனை நம்பி ஐந்து லட்ச ரூபாய் அளவிலான முதலீட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆன்லைன் கோல்டு டிரேடிங் மோசடியில் ஐடி ஊழியரிடம் இருந்து 5 லட்சம் மோசடி
ஆன்லைன் கோல்டு டிரேடிங் மோசடியில் ஐடி ஊழியரிடம் இருந்து 5 லட்சம் மோசடி

இதன் அடிப்படையில், இரண்டே வாரத்தில் 30 லட்சம் ரூபாய் வரை இந்த செயலியில் லாபம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். நிறுவனம் கூறியபடி 30 லட்சம் ரூபாய் ஆன்லைன் கோல்ட் டிரேடிங் மூலம் லாபம் கிடைத்தவுடன் நிறுவனத்திற்கான பங்கு 5 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகு, ஆன்லைன் கோல்டு டிரேடிங் மூலம் செயலியில் வரவு வைக்கப்பட்டுள்ள 30 லட்சம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், ஐந்து லட்ச ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு, 30 லட்சம் ரூபாய் பணத்தை செயலியின் கணக்கிலிருந்து வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றபோது, அரசுக்கு வரி செலுத்த வேண்டும் எனக் கூறி, மேலும் எட்டு லட்ச ரூபாய் செலுத்துமாறு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

வெளிநாட்டு எண்கள் மூலம் வாட்ஸப் கால் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக மட்டுமே செயலியின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசி வந்ததாகவும், அதன் பின்பு தீவிரமாக ஆய்வு செய்த பிறகு தான், மோசடிக்கு உள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 10,000 ரூபாயிலிருந்து லட்சக்கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், பல்வேறு பேக்கேஜுகள் அடிப்படையில் முதலீடு செய்யலாம் என செயலியில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை உயர்வு அடிப்படையில் செயலியில் இருந்து தகவல் வரும்போது, முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்ததாகவும், இதன் அடிப்படையில் நம்பி பணத்தை செலுத்தி லாபம் கிடைத்ததாக நம்பியதாகவும் கூறியுள்ளார். ஆனால், மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியாமல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் 5 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக பலருக்கும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாக வலை விரிக்கும் இந்த கும்பல், சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து லாபத்தை கண்ணில் காட்டி வங்கி கணக்கில் சேரும்படி செய்து நம்ப வைப்பதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.

இந்த மோசடி சம்பவம் குறித்து அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டை போல், வெற்றி பெறுவதாக சில ஆட்டங்களை காட்டி அதன்பின் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பாரம்பரிய அறிவாளிகளே 'மடையர்கள்' - உலக தண்ணீர் தினத்து நாயகர்கள் ஓர் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.