ETV Bharat / state

சென்னையில் 12 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Apr 12, 2022, 1:51 PM IST

சென்னையில் 12 துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும் என்றும் வேளச்சேரியில் இந்த ஆண்டே துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரவையில் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.12) சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேரவை உறுப்பினர் தமிழரசி, மானாமதுரை நல்லாண்டிபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் போது முதலில் அரசு நிலங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அதில் எந்த வருவாய் இழப்பும் இல்லாமல் பெற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சில ஊர்களில் அரசு நிலங்கள் இல்லாத இடத்தில் தனியார் நிலங்களில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நல்லாண்டிபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்: தொடர்ந்து ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். அம்பத்தூர் ஒரகடத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேட்டார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, துறை வாரியாக ஆய்வு செய்து தமிழ்நாடு முழுவதும் 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சீரான மின் விநியோகம் செய்ய எந்த எந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டார். அடுத்ததாக துணை கேள்வி கேட்ட ஹசன் மெளலானா, வேளச்சேரியில் 250 மின்மாற்றிகள் மட்டுமே உள்ளன. 500 மின்மாற்றிகள் இருந்தால் தான் சீரான மின் விநியோகம் செய்ய முடியும் என அலுவலர்கள் கூறுகிறார்கள்.

எனவே, அங்கு துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சென்னையில் 12 இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க முதலமைச்சர் உத்தரவு கொடுத்துள்ளார். வேளச்சேரியில் இந்த ஆண்டே துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் நாள்களில் சீரான மின் விநியோகம் இருக்கும் என அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக மாவட்ட கட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.