ETV Bharat / state

குதிரைக்கும் பொங்கல் - இது மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்

author img

By

Published : Jan 16, 2023, 1:02 PM IST

மாட்டுப் பொங்கல் தினமான இன்று குதிரைக்கு பொங்கல் வைத்து தீப ஆராதனை காட்டி முன்னோடி விவசாயி ஒருவர் வழிபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாட்டுப் பொங்கல் தினத்தில் குதிரைக்கு பொங்கல் வைத்து வழிபட்ட முன்னோடி விவசாயி
மாட்டுப் பொங்கல் தினத்தில் குதிரைக்கு பொங்கல் வைத்து வழிபட்ட முன்னோடி விவசாயி

குதிரைக்கும் பொங்கல்

அரியலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டுப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் தங்கள் வீட்டில் வளரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு மாலைகள் அணிவித்து படையலிட்டு, கால்நடைகளை வணங்கி நன்றி செலுத்துவது விவசாயிகளின் வழக்கம்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தாதம்பேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல்(54). இவர் தனது வீட்டில் திருஷ்டியன், ஓங்கோல், சாகிவால் போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த உயர்ரக மாடுகளை வளர்த்து வருகிறார். அதேபோல வெள்ளாடுகள், கின்னி கோழிகள், நாட்டுக்கோழிகள், சிப்பி பாறை, ராஜபாளையம் வகை நாய்கள், புறாக்கள் போன்றவற்றையும் வளர்த்து வருகிறார்.

அவற்றுடன் காட்பாடி என்ற ரகத்தை சேர்ந்த பெண் குதிரை ஒன்றையும் வளர்த்து வருகிறார். மாட்டுப் பொங்கல் தினமான இன்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதம் தொழுவத்தில் படையல் வைத்து கால்நடைகளுக்கு விவசாயி கதிர்வேல் தீப ஆராதனை காட்டினார். இந்நிலையில் தான் ஆசையாக வளர்த்து வரும் காட்பாடி ரக குதிரைக்கு தீப ஆராதனை காட்டி பிரசாதங்களை ஊட்டி மகிழ்ந்தார்.

மாட்டுப் பொங்கல் தினத்தின்போது பொதுவாக ஆடு, மாடுகள் போன்றவற்றுக்கு மட்டுமே படையல் வைத்து தீபாராதனை காட்டுவது வழக்கம். ஆனால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கதிர்வேல் தனது குதிரைக்கும் சிறப்பாக அலங்காரம் செய்து குதிரைக்கு தீப ஆராதனை காட்டியது இந்தப் பகுதி விவசாயிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தாமதமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை... ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.