ETV Bharat / sports

அர்ஜுனா விருதுக்குத் தேர்வான லான் பவுல்ஸ் வீராங்கனை..! யார் இந்த பிங்கி சிங்..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 5:24 PM IST

Pinky Singh: 2024ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு என அர்ஜுனா விருதுக்குத் தேர்வான லான் பவுல்ஸ் வீராங்கனை பிங்கி சிங் தெரிவித்துள்ளார்.

Pinky singh
Pinky singh

டெல்லி: 2023ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலைக் கடந்த 20ஆம் தேதி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி உள்ளிட்ட 26 பேர் இதில் இடம் பிடித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் லான் பவுல்ஸ் விளையாட்டு வீராங்கனையான பிங்கி சிங் தனது வெற்றி பயணத்தை ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் மூலம் நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நான் 2007ஆம் ஆண்டு முதல் லான் பவுல்ஸ் விளையாட்டை விளையாடி வருகிறேன். இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை டெல்லி, ஆர்.கே.புரத்தில் உள்ள டிபிஎஸ் பள்ளியின் முன்னாள் துணை முதல்வரான டி.ஆர்.சைனியையே சேரும்.

2009ஆம் ஆண்டில் தான் சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக விளையாடினேன். அதன் பிறகு அனைத்து ஆசிய சாம்பியன்ஸ் போட்டிகளிலும் பதக்கம் வென்றேன். அதுமட்டுமல்லாது 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். அதேபோல் தேசிய அளவிலான போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன்.

அர்ஜுனா விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக அர்ஜுனா விருதிற்காக விண்ணப்பித்து வருகிறேன். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவுடன் விருது கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எனது வெற்றிக்குக் கிடைத்த பெருமை ஃபெடரேஷனுக்கானது. குறிப்பாக ராஜா ரந்தீர் சிங், சுனைனா குமாரி, பொதுச் செயலாளர் லோகிந்தர், மேலாளர் அஞ்சு, மற்றும் ஃபெடரேஷனின் தற்போதைய தலைவர் ரவி பெங்கானி ஆகியோர் எனது வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.

2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியின் போது, தனிப்பட்ட காரணங்களால் நான் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். இருப்பினும், எனது நம்பிக்கையைக் கைவிடவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டேன். எனது கடின உழைப்பே எனக்குத் தங்கம் வென்று தந்தது. மேலும், அடுத்ததாக 2024ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வதே எனது இலக்காக உள்ளது" என்றார்.

பிங்கி சிங்: 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவர், 2009ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம், 2014 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2016ல் பெண்களுக்கான டிரிபிள்களில் வெள்ளி மற்றும் பெண்களுக்கான ஃபோர்ஸில் வெண்கலம் மற்றும் 2017ல் பெண்களுக்கான டிரிபிளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோல் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லான் பவுல்ஸ் விளையாட்டு என்றால் என்ன: வெளியரங்க விளையாட்டில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விளையாட்டில் 'தி ஜேக்' என சொல்லப்படும் இலக்கை நோக்கி பவுலை உருட்டி விட வேண்டும். இதுவே இந்த விளையாட்டின் அடிப்படை ஆகும்.

ஒரு போட்டியில் இரண்டு அணிகள் விளையாடும். சிங்கில்ஸ், டபிள்ஸ், ட்ரிபிள்ஸ், மற்றும் ஃபோர்ஸ் என நான்கு பிரிவுகளாக இந்த விளையாட்டை விளையாடலாம். இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஜேக்கை முதலில் உருட்டி விட வேண்டும். குறைந்தது 23 மீட்டர் ஜேக்கானது சென்றிருக்க வேண்டும். அங்கிருந்து தான் ஆட்டமானது தொடங்குகிறது. அதாவது ஜேக் நிற்கின்ற இடத்தை 'எண்ட்' எனக் கூறுகிறார்கள்.

அந்த எண்டை குறிவைத்து பவுல்களை வீரர்கள் உருட்டி விட வேண்டும். நான்கு முறை ஒரு அணி பவுலை உருட்டி விடலாம். அதாவது ஒற்றையராக இருந்தால் அவரே நான்கு வாய்ப்பையும் பயன்படுத்தலாம். அதுவே இரட்டையராக இருந்தால், தலா இரண்டு முறை பவுலை உருட்டலாம். அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திய பிறகே புள்ளிகள் கணக்கிடப்படும்.

எந்த அணி பவுலை ஜேக்கிற்கு மிக அருகில் நிலை நிறுத்துகிறதோ அந்த அணிக்குப் புள்ளிகள் வழங்கப்படும். உதாரணமாக 'ஏ' அணி இலக்கிற்கு அருகே நிறுத்தியதைக் காட்டிலும், 'பி' அணி மிக அருகில் பவுலை நிறுத்தி இருந்தால் அந்த அணிக்குப் புள்ளிகள் வழங்கப்படும்.

ஒற்றையர் பிரிவில் 21 புள்ளிகளை முதலில் பெறுகின்ற அணி வெற்று பெறும். அதேபோல் குழுவாக இருந்தால் 18 புள்ளிகளைப் பெறும் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். லான் பவுலின் எடை 1.5 கிலோ வரை இருக்குமாம். அதிலும் ஒரு பக்கம் எடை அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை 2024: இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.