ETV Bharat / sports

Cricket World Cup 2023: உலகக் கோப்பை போட்டியில் முத்திரை பதித்த ஐந்து பந்து வீச்சாளர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 6:12 PM IST

Cricket World Cup Best bowlers: ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை 2023 போட்டி அக்.5ஆம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை வரலாற்றில் சிறப்பாக விளையாடி தங்களது முத்திரையை பதித்த முதல் ஐந்து பந்து வீச்சாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: ஐசிசி உலகக் கோப்பை 2023 இன்னும் நான்கு நாட்களில் அக்.5ஆம் தேதி தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுடன், வீரர்களும் போட்டியின் தொடக்கத்திற்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்துகிறது. அதன் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள ‘நரேந்திர மோடி’ ஸ்டேடியத்தில் அக்.5 ஆம் நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்கு அனைத்து நாடுகளும் சிறப்பான முறையில் தங்களது அணியை தயார்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களும் தங்களது சிறபான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். அதற்கான பயிற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ஒரு பேட்ஸ்மென் எந்தளவு முக்கியமோ அதே அளவு பவுலர்களும் மிக முக்கியமானவர்கள். ஆட்டத்தின் முடிவை மாற்றக்கூடியவர்கள் இந்த பந்துவீச்சாளர்கள். அந்த வகையில், உலகக் கோப்பை போட்டிகளில் ஜொலித்த முக்கியமான ஐந்து பந்து வீச்சாளர்கள் குறித்த காணலாம்.

ஆனால், இந்த பட்டியலில் எந்த இந்திய பந்து வீச்சாளரும் இடம் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதில், இரண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களும், இரண்டு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களும் பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.

கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஜொலித்த முதல் 5 பந்து வீச்சாளர்கள்:-

1. கிளென் மெக்ராத்:

இந்த பட்டியலில் முதல் பெயர் பிடித்தவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத். மெக்ராத் 1996 மற்றும் 2007ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த 39 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், அவர் அதிகபட்சமாக 42 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். மெக்ராத் 325.5 ஓவர்களில் 1,292 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவர் 42 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். மெக்ராத் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாகும்.

2. முத்தையா முரளிதரன்:

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். முரளிதரன், 40 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் 39 போட்டிகளில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. முரளிதரன் 343.3 ஓவர்களில் 3.88 எக்கனாமி ரேட்டில் 1,335 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். முரளிதரன், 68 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 15 மெய்டன் ஓவர்களை வீசியிருக்கிறார். உலகக் கோப்பையில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது சிறந்த சாதனையாகும்.

3. லசித் மலிங்கா:

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அதே இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. 2007 முதல் 2019ஆம் ஆண்டு இடையில் 29 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய மலிங்காவுக்கு, 28 ஆட்டங்களில் மட்டுமே பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. மலிங்கா 232.2 ஓவர்களில் 1,281 ரன்களை விட்டுக்கொடுத்து, 5.51 என்ற எக்கனாமி ரேட்டில், 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர், 11 மெய்டன் ஓவர்களை வீசியிருக்கிறார். ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த சாதனையாகும்.

4. வாசிம் அக்ரம்:

இந்த வரிசையில் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இருக்கிறார். 1987 முதல் 2003ஆம் ஆண்டு வரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் 38 ஆட்டங்கள் விளையாடியிருக்கிறார். இதில், 36 போட்டிகளில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அழைக்கப்படும் வாசிம் அக்ரம் 324.3 ஓவர்களில் 4.04 என்ற எகானமி ரேட்டில் 1,311 ரன்கள் கொடுத்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்ரம் ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார், 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சாதனை.

5. மிட்செல் ஸ்டார்க்:

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர், இதுவரை 2015 மற்றும் 2019 ஆகிய இரண்டு உலகக் கோப்பைகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அவர் 2023 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பெற்றிருக்கிறார். மிட்செல் ஸ்டார்க் 18 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 156.1 ஓவரில் 4.64 என்ற எகானமி ரேட்டுடன் 726 ரன்களைக் கொடுத்து ஒரு மெய்டன் ஓவரை வீசியுள்ளார்.

அவர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், அவர் 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலி அணி வெற்றி பெற்றதற்கு ஸ்டார்க்கின் அதிக விக்கெட்டுகள் மிக முக்கியாக இருந்துள்ளது. அதேபோல், 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் ஸ்டார்க் அதிக விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, இந்த வரிசையில் இனி வரும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இடம்பெறுவார்களா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: உலகக் கோப்பையை வெல்வதற்கு ரோகித் கேப்டன்சி எப்படி? - ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.