ETV Bharat / sports

உலகக் கோப்பையை வெல்ல அனைத்து வழிகளிலும் போராட தயார் - ரோகித் சர்மா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 9:56 AM IST

Rohit Sharma: உலகக் கோப்பையை வெல்ல அனைத்து வழிகளிலும் போராடத் தயாராக உள்ளோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ready-to-fight-all-the-way-to-win-the-world-cup-rohit-sharma
உலக கோப்பையை வெல்ல அனைத்து வழிகளிலும் போராட தயார்... ரோகித் சர்மா

சென்னை: இந்தியாவில் நடக்கவிருக்கும் 13வது ஐஐசி உலகக் கோப்பை இன்று (அக்-5) தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தி அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், நேற்று உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ரோகித் சர்மா, “உலகக் கோப்பை போட்டி என்பது ஒரு நீண்ட தொடராகும். எனவே, பின்னால் வரும் போட்டிகளைப் பற்றி கவலை கொள்ளாமல் ஒவ்வொரு போட்டிகளிலும் கவனம் செலுத்திட வேண்டும். எதிர்பார்ப்புகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் அவை எப்போதும் இருக்கும்.

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள்
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள்

நாம் எந்த அணியுடன் விளையாடுகிறோம், யார் விளையாடுகிறார்கள், போட்டியின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஒரு அணியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஒரு விளையாட்டு வீரராக விளையாடும் காலம் வரை நெருக்கடிகள் நம்மை விட்டுப் போவதில்லை. இந்திய வீரர்கள் எங்கு விளையாடினாலும், அங்கு உருவாகும் அழுத்தத்தை கடந்து செல்ல பழகி விட்டார்கள்.

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கடந்த 3 முறையும் உலகக் கோப்பை நடத்திய அணிகள் கோப்பையை வென்றுள்ளது என்ற வரலாறு குறித்து நான் அதிகமாக யோசிக்கவில்லை.

எங்களைப் பொறுத்தவரையில், ஒரு அணியாக களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். மேலும், போட்டியை ரசித்து அணுபவித்து விளையாடுவோம். வருகிற அக்டோபர் 8 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளோம். ஒவ்வொரு போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து , உலகக் கோப்பையை வெல்ல அனைத்து வழிகளிலும் போராட தயாராக உள்ளோம்” என கூறினார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் களைகட்டும் சென்னை… இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.