ETV Bharat / sports

தொடங்கியது ஆஷஸ் போர்: ஆஸ்திரேலியா ஆதிக்கத்தில் அலறிய இங்கிலாந்து

author img

By

Published : Dec 8, 2021, 11:34 AM IST

Updated : Dec 8, 2021, 2:38 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஆஷஸ் போட்டியில், இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, ஆஷஸ் தொடர், ASHES 2021-22 1st Test ENGLAND ALL OUT FOR 147
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இன்று (டிசம்பர் 8) தொடங்கியது.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய டிம் பெய்ன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஸ்டார்க் ஸ்டார்ட் செய்த ஃபயர்

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பு முதன்முதலாக வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கம்மின்ஸ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். போட்டி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்குத் தொடங்கியது. முதல் ஓவரை வீசிய ஸ்டார்க், முதல் பந்தில் ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைத் தொடங்கிவைத்தார். ஹசில்வுட் வீசிய நான்காவது ஓவரில் மலான் 6 ரன்களுக்கும், ஆறாவது ஓவரில் கேப்டன் ரூட் ரன் ஏதும் அடிக்காமலும் ஆட்டமிழந்தனர்.

பட்லர் - போப் ஆறுதல்

மன உளைச்சல் காரணமாக நீண்ட நாளாக ஓய்வில் இருந்த ஸ்டோக்ஸ் தற்போது அணிக்குத் திரும்பியிருந்த நிலையில், அவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

சிறிதுநேரம் மட்டும் தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ், கம்மின்ஸ் பந்துவீச்சில் ஐந்து ரன்களில் பெவிலியன் திரும்பினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை (26 ஓவர்கள்), இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னான, முதல் ஓவரில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஹசீப் ஹமீது 25 ரன்களுக்கு வெளியேறினார். இதன்பின்னர், ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஓல்லி போப், ஜாஸ் பட்லர் ஆகியோர் சீராக ரன்களைக் குவித்தனர்.

காபாவில் கொடி நாட்டிய கம்மின்ஸ்

இந்த ஜோடி, 52 ரன்கள் குவித்தபோது பட்லர் 39 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் வீழ்ந்தார். போப் 35 ரன்களில் கேம்ரன் கிரீனிடம் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 118 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது.

இதன்பின்னர், கிறிஸ் வோக்ஸ் மட்டும் நிலைத்துநின்று ஆடினார். அடுத்துவந்த ஓல்லி ராபின்சன் 0, மார்க் வுட் 8 ஆகியோர் வெளியேற இறுதியாக வோக்ஸ் 21 ரன்களில் வீழ்ந்தார்.

இதன்மூலம், இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சில் (50.1 ஓவர்கள்) 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் சார்பில் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர், தேநீர் இடைவேளை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது பேட்டிங்கைத் தொடங்கம் முன் மழைக் குறுக்கிட்டதால், மூன்றாவது செஷன் ரத்துசெய்யப்பட்டு முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இதையும் படிங்க: IND vs NZ: 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - தொடரை கைப்பற்றியது

Last Updated :Dec 8, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.