ETV Bharat / sports

ENG vs IND: விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறும் இந்தியப் பந்துவீச்சாளர்கள்

author img

By

Published : Aug 26, 2021, 6:55 AM IST

இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதுவரை இந்தியாவைவிட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ENG vs IND
ENG vs IND

லீட்ஸ்: இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) தொடங்குகியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

இடிந்தது இந்திய பேட்டிங்

இதன்படி, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் (40.4 ஓவர்களில்) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக ரோஹித் 19 ரன்களையும், ரஹானே 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளனர்.

அசத்திய வேகப்பந்துவீச்சு

மேலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இந்தியா 22 ரன்களை மட்டும் எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்துவீச்சுத் தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் - ராபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பர்ன்ஸ், ஹசீப் ஹமீது ஆகியோர் இங்கிலாந்து அணிக்குத் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிவந்த நிலையில், இங்கிலாந்து தேநீர் இடைவேளைக்கு முன்னர்வரை 7 ஓவர்களில் 21 ரன்களை எடுத்தது.

மாஸ் ஓப்பனிங்

ஹசீப் ஹமீத் 15 ரன்களுடனும், பர்ன்ஸ் 3 ரன்களுடனும் மூன்றாவது செஷனை தொடங்கினர். இங்கிலாந்து அணியில் பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது, அந்த அணியின் தொடக்கம்தான். இதனால்தான் இப்போட்டியில் டாம் சிப்ளி நீக்கப்பட்டு, ஹமீத் ஹசீப் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார்.

இந்தப் பரிசோதனை முயற்சி இங்கிலாந்துக்கு நன்றாகவே கைகொடுத்தது. இஷாந்த், பும்ரா, ஷமி ஆகியோரின் ஓப்பனிங் ஸ்பெல்லை (முதல் 18 ஓவர்கள்) ராரி பர்ன்ஸ்-ஹமீத் ஹசீப் இணை கவனமாகக் கணித்து விளையாடியது. பந்து சற்று தேய ஆரம்பித்தவுடன் சிராஜும் தன் பங்கிற்குப் பல வேரியேஷன்களைப் பயன்படுத்திப் பார்த்தார்.

ஓவர்களை ஒப்பேற்றிய ஜடேஜா

ஆனால், இந்த முறை விக்கெட்டை கோட்டைவிட மாட்டோம் என இருவரும் விடாப்பிடியாக நின்று விளையாட, இங்கிலாந்து 21ஆவது ஓவரிலேயே அரை சதம் கடந்தது. 'ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், ஜடேஜா இன்று (ஆகஸ்ட் 25) அதிக ஓவர்களை வீசுவார்' என டாஸ் செஷனின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.

ஆனால், கடந்த இரண்டு போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் ஜடேஜாவின் சுழல் எடுபடவில்லை. அவர் விரைவாக ஓவர்களை வீசவே பயன்பட்டார். இதனால், இங்கிலாந்து ரன் எடுப்பதில் சீராக முன்னேறியது. சிராஜ் வீசிய 31ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஹமீது பவுண்டரி அடித்து இங்கிலாந்தை முன்னிலை பெறச் செய்தார்.

11 ஆண்டுகளுக்கு பின்

இதற்குமுன், 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் பாக்ஸிங் போட்டி இப்படி நடந்தது. அப்போதைய தொடக்க வீரர்கள் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், அலஸ்டியர் குக் ஆகியோர் சேர்ந்து தங்களது விக்கெட்டை இழக்காமல், ஆஸ்திரேலியாவின் 98 ரன்களைக் கடந்து இங்கிலாந்து அணியை முன்னிலை பெறவைத்தனர்.

அதன்பின் இங்கிலாந்து அணி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, சிறப்பாக ஆடிய இந்த இணை 36ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. பின்னர், தான் சந்தித்து 110ஆவது பந்தில் ஹமீத் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத் தொடர்ந்து பர்ன்ஸ் தனது ஒன்பதாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

முடிந்தது முதல் நாள்

இதன்மூலம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் (42 ஓவர்கள்) இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது. ஹமீத் 60 ரன்களுடனும், பர்ன்ஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியில் இன்னும் ஜோ ரூட், டேவிட் மாலன், பேர்ஸ்டோவ் ஆகிய முதல் வரிசை வீரர்கள் - பட்லர், மொயின் அலி, சாம் கரண் போன்ற பின்வரிசை வீரர்கள் என பலமான பேட்டிங் ஆர்டர் இருப்பதால் இங்கிலாந்து பெரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.

முதலாம் நாள் ஆட்டம் செஷன் வாரியாக

முதலாவது செஷன்: இந்தியா - 25.5 ஓவர்கள் - 56/4

இரண்டாவது செஷன்: இந்தியா - 14.5 ஓவர்கள் - 22/6;

இங்கிலாந்து - 7 ஓவர்கள் - 21/0

மூன்றாம் செஷன்: இங்கிலாந்து அணி - 35 ஓவர்கள் - 99/0

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 26) மதியம் 3.30 மணிக்குத் (இந்திய நேரப்படி) தொடங்கும்.

இதையும் படிங்க: WTC POINTS TABLE: முதல் இடத்தில் விராட் & கோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.