ETV Bharat / sports

Virat Kohli Birthday : பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிங் கோலி! சிறப்பு தொகுப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 10:44 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும் விராட் கோலி சதம் அடித்து ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 35வது பிறந்த நாளை கொண்டாடும் விராட் கோலி குறித்து சிறப்பு செய்தித் தொகுப்பு..!

Virat Kohli Birthday
Virat Kohli Birthday

ஹைதராபாத்: கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் நாம் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு விராட் கோலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தன்னுடைய 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்தடம் பதித்த கோலி தற்போது உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில், தனது 35வது பிறந்த நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இன்று(நவ. 5) களமிறங்குகிறார் விராட் கோலி. இந்நாளில் கோலியின் சில சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

  • 2011ஆம் ஆண்டு உலக கோப்பை மூலம் கிரிக்கெட் உலகிற்கு ரன் இயந்திரமாக அறிமுகமான விராட் கோலி, இதுவரை மூன்று உலக கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார்.
  • டி20 போட்டிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் 7ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்த ஒரே வீரர் விராட் கோலி.
  • ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த கோலி, 276 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரத்து 525 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
  • அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (49 சதம்) அடுத்தபடியாக உள்ளார் கோலி (48 சதம்). இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து விடுவார்.
  • 2008ஆம் ஆண்டு கோலி தலைமையிலான இந்திய அணி U19 உலகக் கோப்பையை 2வது முறையாக வென்றது.
  • இதுவரை அவர் விளையாடிய 286 ஒருநாள் போட்டிகளில் 48 சதம், சராசரி 58.04 ஆக உள்ளது. அதேபோல் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 29 சதம் உட்பட 8 ஆயிரத்து 676 ரன்கள் விளாசி உள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் இதுவரை 78 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த படியாக உள்ளார்.

சச்சினுடன் ஒப்பிடாதீர்கள்: சச்சின் தெண்டுல்கர் மற்றும் விவி ரிச்சர்ட்ஸ் ஆகியோருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் விராட் கோலி கூறியவை இவை.

சச்சினின் ஓய்வுக்குப் பின்பு இனி அவரது இடத்தை நிரப்பப் போவது யார் என அனைவரும் முணுமுணுக்கத் தொடங்கினர். ஆனால் நவீன கிரிக்கெட் உலகின் அடையாளமாக உருவெடுத்து நிற்கிறார் விராட் கோலி. அவர் இன்று வரை பல சாதனைகளைத் தகர்த்துக் கொண்டே வருகிறார்.

அதனாலேயே என்னவோ அவரை அவரது ரசிகர்கள் கிங் கோலி, ரன் மிஷன் என்றெல்லாம் அழைக்கின்றனர். கிரிக்கெட்டை ஒரு ரசிகர் கொண்டாட நினைப்பாரே என்றால், அவரால் விராட் கோலியை கொண்டாடாமல் இருக்க முடியாது.

கோலியின் மோசமான காலகட்டம்: அனைத்து வீரர்களுக்கும் ஒரு மோசமான காலகட்டம் அமையும். அது கோலிக்கு 2019ஆம் ஆண்டு வந்தது. மளமளவென சதங்கள் அடித்து பல சாதனைகளை படைத்த கோலி கிட்டதட்ட 1,200 நாட்கள் சதம் விளாசவில்லை. அவ்வளவு தான் கோலி, அவர் ஒய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

தன்னப்பிக்கையும், கடின உழைப்புமே நமக்கு வெற்றியை தேடி தரும் என கூறுவார் கோலி. அதன்படியே அவரது கடின உழைப்பாலும், அவர் மேல் வைத்த நம்பிக்கையாலுமே அவர் அதில் இருந்து மீண்டு வந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடிக்காத கோலி, கடந்த வருட ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தான் என்றுமே கிங் கோலி தான் என்பதை நிருபித்தார். இதனையடுத்து ஒரு வருடத்தில் மட்டும் 8 சதங்கள் அடித்து அசத்தி உள்ளார்.

பிறந் தநாள் வாழ்த்துக்கள் விராட் கோலி: சர்வதேச ஒருநாள் போட்டியில் சச்சினின் சதத்தை சமன் செய்வதற்கு இன்னும் ஒரே ஒரு சதம் மட்டுமே தேவையாக உள்ளது. அதனை தனது பிறந்த நாளான இன்று தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். பல்வேறு சாதனைகளை செய்து பீனிக்ஸ் பறவையாக திகழ்ந்து வரும் விராட் கோலி இன்று 35வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஈ.டிவி பாரத் தமிழ்நாடு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.

இதையும் படிங்க: India Vs South Africa : இந்தியாவின் வெற்றி வேட்கை தொடருமா? தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.