ETV Bharat / sports

ICC Women's World Cup: வீழ்ந்தது வங்கதேசம்; தொடரில் நீடிக்கும் இந்தியா

author img

By

Published : Mar 22, 2022, 8:02 PM IST

மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

India beat Bangladesh by 110 runs
India beat Bangladesh by 110 runs

ஹமில்டன் (நியூசிலாந்து): ஐசிசி மகளிர் உலகக்கோப்பைத் தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 எடுத்தது. அதிகபட்சமாக, யஸ்திகா பாட்டீயா 50, ஷஃபாலி வர்மா 42 ரன்களைக் குவித்தனர். வங்கதேச பந்துவீச்சில் ரிது மோனி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இதையடுத்து, 230 என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே, இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் வங்கதேசம் ரன் குவிக்கத் திணறியது. அதிக டாட் பால்களை ஆடிய பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டையும் பறிகொடுத்து வந்தனர். இதனால், 40.3 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன்மூலம், 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, மூன்று வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணியுடன் வரும் மார்ச் 27ஆம் தேதி மோத உள்ளது. அந்தப் போட்டியில் பெரிய அளவில் இந்தியா வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும். யஸ்திகா பாட்டீயா சிறந்த வீரராகத் தேர்வானார்.

தற்போது, ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு பெரியளவில் வாய்ப்பில்லை என்பதால் தென்னாப்பிரிக்கா, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய ஐந்து அணிகள் அடுத்த மூன்று இடங்களுக்கு முட்டி மோதி வருவது, மகளிர் உலகக்கோப்பைத் தொடரை சுவாரஸ்யமாக்கியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டெம்ப் தெறிக்க... தனது வருகையைப் பறைசாற்றிய யாக்கர் கிங் நடராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.